மும்பை : பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீச காரணம், அவர்கள் தற்போது மட்டன் கறி சாப்பிடத் துவங்கி விட்டார்கள் என கூறி இருக்கிறார்.
இந்திய அணியை சீண்டும் வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டவர்தான் ஷாஹித் அப்ரிடி. அதை இப்போதும் செய்து இருக்கிறார். இந்திய வீரர்கள் குறித்த அவரது தவறான கருத்தால் ரசிகர்கள் அவரை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஷாஹித் அப்ரிடி ஆல் - ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்காக பல முக்கிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டவர்.
அவர் மீது பாகிஸ்தான் மக்களிடம் பெரிய மதிப்பு இருப்பதால் இவரது கருத்துக்கள் அங்கே பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரும். அதே சமயம், அப்ரிடி இந்திய எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொள்பவர். அதனாலேயே அவரது இந்த தவறான கருத்து முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
தற்போது இந்திய அணியின் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், ஹர்திக் பாண்டியா போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். அவர்களை தான் அப்ரிடி இப்போது மட்டன் கறி உண்கிறார்கள் என கூறி இருக்கிறார்.
அவர் பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளின் வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய போது, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டு அணிகளுமே முன்பு இருந்தது போல இல்லை. முன்பு பாகிஸ்தான் அணி சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே உருவாக்கும் அணியாக இருந்தது. அதே போல, இந்தியா சிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கும் அணி என்ற பெயர் பெற்று இருந்தது. ஆனால், இப்போது இரண்டு அணிகளுமே சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை உருவாக்குகின்றன. இந்திய பவுலர்கள் மட்டன் கறியை அதிகம் உண்கிறார்கள். அதனால், பலம் பெற்று விட்டார்கள் என கூறி இருக்கிறார்.
இவரது இந்தக் கருத்து தவறான பார்வையில் கூறப்பட்டு இருக்கிறது. முதலில் அசைவம் உண்டால் மட்டுமே வேகமாக பந்து வீச முடியும் என்பதை நிபுணர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சிலருடைய உடல்வாகுக்கு அது உதவி செய்யலாம். எல்லோருக்கும் அது பொருந்தாது.
அடுத்தது, இதற்கு முன்பு இருந்த இந்திய பந்துவீச்சாளர்கள் சைவம் உண்டார்கள் என்பது போலவும், இப்போது உள்ள பந்துவீச்சாளர்கள் அசைவம் உண்கிறார்கள் என்பது போலவும் அப்ரிடி பேசி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அப்ரிடி தன் பேச்சின் போது என்ன வார்த்தையை பயன்படுத்தி இந்திய வீரர்கள் அசைவம் உண்கிறார்கள் என்று கூறினார் என்பதும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர் பெர்சிய வார்த்தையான "Gosht" (கோஷ்ட்) என்பதை பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு "அசைவ கறி" என்பது பொருள். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த வார்த்தைக்கு இன்னும் குறிப்பாக ஆட்டுக் கறியை தான் குறிக்கும்.
ஷாஹித் அப்ரிடியின் இந்த முதிர்ச்சியற்ற பேச்சுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்திய வீரர்கள் திறமையே இல்லாமல், பயிற்சியே இல்லாமல் வெறும் மட்டன் கறி தின்று பந்துவீசி அவர்களின் திறனை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என அவரை விமர்சித்து வருகிறார்கள்.