டெல்லி: முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி, இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை விட இந்தியா பத்து வருடம் பின்தங்கியிருக்கிறது எனவும், இந்தியாவை எதிரி நாடு என்று சொல்வதே அவமானம் என்றும் பேசி இருக்கிறார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்குக் கண்டனங்களும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த பிரச்சனை நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. சில நாட்கள் வரை நீடித்த அந்த தாக்குதல் சம்பவங்கள் பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் தன்னை தற்காத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியதாகவும் கூறப்பட்டது.

இப்படி பாகிஸ்தான் உண்மையாகவே பின்னடைவை சந்தித்திருந்தாலும், பாகிஸ்தான் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்தியாவை விட பாகிஸ்தான் வலுவாக இருப்பதாகவும், இந்தியா பின்வாங்கியதாகவும் சில பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி இது போன்ற ஒரு கருத்தைப் பேசியிருக்கிறார். அதில், "பாகிஸ்தானை விட இந்தியா பத்து வருடம் பின்தங்கியிருக்கிறது. நமக்குச் சரிசமமாகவோ, நம்மை வீழ்த்த வேண்டும் என்பதையோ கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். உலகிலேயே அதிக முன்னேறிய தொழில்நுட்பங்களை வைத்திருக்கும், வேகமாக வளர்ந்து வரும் நாடு பாகிஸ்தான். இந்தியாவை நமது எதிரி என்று சொல்வது பாகிஸ்தானுக்கு அவமானம்" இவ்வாறாக ஷாஹித் அப்ரிடி பேசியிருக்கிறார்.
இந்த முட்டாள்தனமான பேச்சை சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்த்து வருகின்றனர். ஷாஹித் அப்ரிடி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி பாகிஸ்தானில் புகழ் வெளிச்சம் தேடி வருகிறார். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் முடிவானது. அதன் பிறகு ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டதாக சாலைகளில் ஊர்வலம் சென்றார். இதுபோல தவறான சித்தரிப்புகளை செய்து கவன ஈர்ப்பு செய்து வருகிறார் ஷாஹித் அப்ரிடி.