சதி.. 'என் கணவர் வில்லனா?'.. பேஸ்புக்கில் பொங்கிய ஷகிப் மனைவி.. விடாமல் நச்சரித்த ரசிகர்கள்
டாக்கா: கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஷகிப் அல் ஹசன் கோபத்தால் செய்த செயல் வீபரீதமாக, ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிக்க, கணவருக்கு ஆதரவாக பொங்கி எழுந்திருக்கிறார் மனைவி.
Dhaka Premier Division Twenty20 கிரிக்கெட் லீக் தற்போது வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில், மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது.
இதில், மோஹம்மெதான் அணியின் கேப்டன் ஷகிப்-அல் ஹசன் கோபத்தின் உச்சிக்கு சென்று ஸ்டெம்ப்புகளை உதைத்து, வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வாக்குவாதம்
முதலில் பேட்டிங் செய்த ஷகிப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு ஒரு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

பறந்த ஸ்டெம்ப்புகள்
அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், அம்பயர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடுங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.

மன்னிப்பு கேட்ட ஷகிப்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்று வெளியிட்ட ஷகிப், அதில் "அன்புள்ள ரசிகர்களே, ஃபாலோயர்களே, எனது மனநிலையை இழந்து, கிரிக்கெட் பார்க்கும்.. குறிப்பாக வீட்டிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடையும் விதமாக நான் நடந்து கொண்டது குறித்து மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது, ஆனால் சில சமயங்களில் இது போன்று துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுகிறது. எனது இந்த 'மனித பிழை'க்கு அணிகள், நிர்வாகம், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் இதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் எனது அன்புகள்" என்று பதிவிட்டுள்ளார்.

கடுப்பான மனைவி
எனினும், வங்கதேசத்தில் ஷகிப் நடந்து கொண்ட விதம் குறித்து தொடர்ந்து அங்குள்ள டிவி சேனல்கள் செய்தி ஒளிபரப்பி வருகின்றன. இதனால், ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்து, ஷகிப்பை விமர்சித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்த்து கடுப்பான ஷகிப் மனைவி, உம்மே அல் ஹசன், "இந்த சம்பவத்தை நான் ஊடகங்களைப் போலவே அனுபவித்து வருகிறேன், இறுதியாக தொலைக்காட்சியில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்றைய சம்பவத்தின் தெளிவான நிலையை கண்டறிந்த சிலரின் ஆதரவைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, குறைந்தபட்சம் சிலராவது எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக தைரியமாக நிற்கிறார்கள்.

சதி நடக்கிறது
எவ்வாறாயினும், ஷகிப் வெளிப்படுத்திய கோபத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி, முக்கிய பிரச்சினை ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. முக்கிய பிரச்சினை நடுவர்களின் தவறான முடிவுகள். அதனால் தான் ஷகிப் கோபம் அடைந்தார். தலைப்புச் செய்திகள் உண்மையில் வருத்தமளிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை எல்லா சூழ்நிலைகளிலும் அவரை வில்லனாக சித்தரிப்பது சிறிது காலமாக நடந்து வரும் ஒரு சதி! என்று தனது பேஸ்புக்கில் மனதில் இருப்பதை கொட்டித் தீர்த்துள்ளார். எனினும், ரசிகர்கள் அவரது போஸ்ட்டுக்கும் கார சாரமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications