சிட்னி: விராட் கோலி இருக்கும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டு சிறப்பான வளர்ச்சி பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா நிர்ணயித்த 368 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, 210 ரன்களுக்கு அல் அவுட்டாக, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்று முன்னிலையில் உள்ளது.

நாளை மறுதினம் (செப்.10) மான்செஸ்டரில் தொடங்கவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றிப் பெற்றால் தொடரை 2-2 என்று சமன் செய்ய முடியும். ஒருவேளை, மீண்டும் இந்தியா வெற்றிப் பெற்றுவிட்டால் 2007ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்லும். அதுவும் 3-1 என்று இங்கிலாந்து அணியை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சரித்திரத்தை மாற்றி எழுதும். குறைந்தபட்சம் டிராவானாலே, இந்தியாவிற்கான கோப்பை உறுதியாகிவிடும். இந்த போட்டியில், இங்கிலாந்து டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கில் விளையாடினால் நிச்சயம் தோல்வியை தவிர்க்க முடியாது. இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று விளையாடினால் தான், கோப்பை இந்தியாவுக்கு செல்வதை தடுக்க முடியும்.
இதுவரை இல்லாத அளவுக்கு, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதற்கு முக்கியமான காரணம், அணி ஒருங்கிணைந்து விளையாடுவதே. கடந்த 2018ம் ஆண்டு தொடரிலும், பலம் வாய்ந்த இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இத்தனைக்கும் விராட் கோலி அப்போது உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார். சதங்களை விளாசினார். ஆனாலும், இந்தியாவால் ஒரு போட்டியைத் தவிர்த்து, வேறு எதிலும் வெல்ல முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா கூட அந்த தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால், இம்முறை தொடக்க வீரர்கள் காயம், மிடில் ஆர்டரின் மோசமான ஃபார்ம், பவுலிங்கில் கூட வீரர்களுக்கு காயம் என்று பல சிக்கல்களை இந்திய அணி சந்தித்தாலும், இங்கிலாந்தை கொத்துக்கறியாக்கிவிட்டது இந்தியா. அதுதான் ஆச்சர்யமே! இங்கிலாந்து ஒரு படி ஏறினால், இந்தியா 5 படி ஏறுகிறது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஜெயிக்கிறது, ஹெட்டிங்லேவில் அடுத்த போட்டியில், இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றிப் பெறுகிறது. இங்கிலாந்தோ, மூன்றாவது போட்டியின் வெற்றிக்கு பிறகு, "அந்த ஒரு மேட்சில் ஏமாந்துட்டோம்" என்ற மோடில் உச்சக்கட்ட கான்ஃபிடண்ட் மைண்ட் செட்டில் அடுத்த போட்டிக்கு தயாரானது. ஆனால், அதற்கு அடுத்த போட்டியிலேயே, இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துகிறது இந்தியா. இந்த "இன்டென்ட்" தான் நம்ப முடியாத வகையில் இருக்கிறது. ஒருவேளை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருக்குமாயின் கிளைமேக்ஸ் மாறியிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்திய அணி, இத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்றால் சந்தேகத்துக்கு இடமின்றி அது விராட் கோலி எனலாம். பேட்டிங்கில் ஜொலித்தாலும், ஜொலிக்காவிட்டாலும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும், ஒவ்வொரு செஷனிலும், ஒவ்வொரு ஓவரில் அவர் காட்டிய அந்த உத்வேகம் இருக்கிறதே.. அப்பப்பா! இந்தியா இந்த அளவுக்கு டஃப் கொடுப்பதற்கு காரணமே விராட் கோலியின் அக்ரெஷன், ஆக்ரோஷம் தான் என்று யோசிக்காமல் சொல்லலாம். இந்தியா ஜெயித்த இரண்டு போட்டிகளிலும், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து தான் டாமினேட் செய்திருக்கிறது. அப்படியிருந்தும், பேட்டிங், பவுலிங் என இரண்டு பக்கத்திலும் வீரர்களும் புஜபலம் திரட்டி இங்கிலாந்தை வியர்க்க வைத்துவிட்டனர். ஜெயித்துவிட்டனர். ரோஹித் ஷர்மா, இங்கிலாந்து மண்ணில் சதம் அடிப்பார் என்று எவராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?
இந்நிலையில், விராட் கோலி கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்து அவர், ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், "கேப்டன் விராட் கோலி அனைத்து வீரர்களின் மரியாதையையும் பெற்றுள்ளார். அவர்கள் அவரை ஆதரித்து அவருக்காக விளையாடுகிறார்கள். ஒரு அணி உங்களுக்காக விளையாடுவது ஒரு கேப்டனுக்கு மிக முக்கியமானது. விராட் அணியை நடத்தும் விதம், நாம் அனைவரும், 'நன்றி விராட்' என்று சொல்ல வேண்டும். அவர் அணியை வழிநடத்திய விதம், வெற்றிப் பெறுவோம் என்று அவர்களை நம்ப வைத்த விதம் அற்புதமானது. நம்பிக்கை என்பது விளையாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். நீங்கள் வெற்றிப் பெறுவோம் என நம்பவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு நல்ல அணியாக இருந்தாலும் வெற்றி பெற மாட்டீர்கள். கோலி தனது அணிக்கு நம்பிக்கையைத் தருகிறார், அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. விராட் கோலி இருக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். தயவுசெய்து விராட் கோலி மிக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று நெகிழ்ச்சியுடன் ஷேன் வார்ன் கூறியுள்ளார்.