ஒரு அணிக்காகவும் அதற்கு எதிராகவும் சதம்.... சிஎஸ்கே ஷேன் வாட்சன் எதிர்பார்க்காத சாதனை
Recommended Video

புனே: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்காகவும், அந்த அணிக்கு எதிராகவும் சதமடித்த விந்தையைப் புரிந்துள்ளார், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. சீசனின் 17வது ஆட்டத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபாரமாக வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த சீசனில் அடிக்கப்படும் இரண்டாவது சதம் இதுவாகும். மேலும், ஷேன் வாட்சனுக்கு ஐபிஎல்லில் இது மூன்றாவது சதம். ஐபிஎல் வரலாற்றில் இது 49வது சதம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008 முதல் 2015 வரை விளையாடிய வாட்சன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 2016 மற்றும் 2017ல் விளையாடினார். இந்த ஆண்டு அவரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.
இதுவரை ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக இரண்டு சதங்களை அடித்துள்ளார் ஷேன் வாட்சன். அதில், முதல் சதத்தை சிஎஸ்கே அணிக்கு எதிராக எடுத்தார். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்காக ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்தார். 2013ல் சென்னையில் நடந்த ஆட்டத்தில் 61 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒரு அணிக்காகவும், அந்த அணிக்கு எதிராகவும் சதம் அடித்துள்ள பெருமையை பெற்றுள்ளார் வாட்சன்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 30 வீரர்களால் 49 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 6 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோஹ்லி நான்கு சதங்கள் அடித்துள்ளார். டேவிட் வார்னர், டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் தலா 3 சென்சுரி அடித்துள்ளனர். ஒரு சீசனில் அதிக சதம் அடித்த சாதனையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார். 2016ல் அவர் நான்கு சதங்கள் அடித்தார்.
அணிகளை பொறுத்தவரை, பெங்களூரு அணியின் வீரர்கள் 12 சதங்களை அடித்துள்ளனர். பஞ்சாப் அணி 10, டெல்லி 7, சிஎஸ்கே 6 சதங்களை பெற்றுள்ளன. இதில் அதிக சதமடித்த முதல் மூன்று அணிகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை.


Click it and Unblock the Notifications