லோதா கமிட்டியால் நெருக்கடி.. மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் ராஜினாமா!
மும்பை: மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் (76) பதவி விலகியுள்ளார். லோதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ ஏற்றால் சரத் பவார் பதவியை இழப்பார் என்பதால் முன்கூட்டியே ராஜினாமா முடிவை எடுத்துள்ளார் அவர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் மும்பை கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். ஆனால் பிசிசிஐ அமைப்பில் அரசியல் தாண்டவமாடியதை சுட்டி காட்டிய முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரை அடிப்படையில் பிசிசிஐ சார்ந்த அமைப்புகளில் பதவி வகிப்போரின் வயது, அவர்கள் வகித்து வந்த பதவி காலம் போன்றவற்றுக்கு கெடுபிடி போடப்பட்டது. இந்த பரிந்துரையை அமல்படுத்த பிசிசிஐ முரண்டு பிடித்து வந்தாலும், உச்சநீதிமன்றம் கடுமையான நெருக்கடி கொடுத்து வருவதால் விரைவில் லோதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ ஏற்றாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலை ஏற்பட்டால் சரத் பவார் பதவியிலிருந்து விரட்டப்படுவார். இதை கருத்தில் கொண்டு கவுரவமாக முன்கூட்டியே இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சரத் பவார்.
சரத் பவார் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications