இதனால்தான் இவர் லார்ட் ஷர்துல்.. முதல் 2 பந்தில் செய்த விஷயம்.. பிரேஸ்வெல்லை அவுட்டாக்கியதன் பின்னணி
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெறுவதற்கு ஷர்துல் தாக்கூரின் கடைசி ஓவர் தான் காரணம். ஆனால் அந்த ஓவரில் அவர் போட்ட திட்டங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
நியூசிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து விட்டது. எனினும் மைக்கேல் பிரேஸ்வெல்லின் அட்டகாச சதத்தால் (140) கடைசி ஓவர் வரை வந்து 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் ஒருநாள் போட்டி
நியூசிலாந்து அணி 150 ரன்களை கூட எட்டுமா என்பதே பெரிய விஷயமாக தான் இருந்தது. ஏனென்றால் 131 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்கள் சரிந்துவிட்டன. முன்னணி வீரர்கள் அனைவரும் அவுட்டாகினர். ஆனால் அப்போது களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் ஒற்றை ஆளாக நியூசிலாந்து அணியை தூக்கி நிறுத்தினார். 78 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 140 ரன்களை விளாசினார்.

கடைசி ஓவர் விறுவிறுப்பு?
பிரேஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால், கடைசி ஓவரில் வெற்றி பெற 20 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. ஆனால் 9 விக்கெட்கள் பறிபோகியிருந்தன. இந்த இக்கட்டான சூழலில் தான் ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் வீசிய முதல் பந்தே சிக்ஸர் பறந்தது. 2வது பந்து நல்ல வேலையாக மிஸ்ஸாகிவிட்டது என்று பார்த்தால், அதிக பவுன்ஸ் எனக்கூறி அம்பயர் வைட் கொடுத்துவிட்டார். ஆனால் இது அனைத்துமே ஷர்துலின் திட்டம் தான்.

அட்டகாச திட்டம்
அதாவது பிட்ச்-ல் பந்து நின்று வரும் அளவிற்கு மிகவும் ஸ்லோவாகிவிட்டது. எனவே நல்ல வேகத்தில் ஷார்ட் பாலாக போட்டால் கேட்ச் கிடைக்கலாம். அதற்காக தான் முதல் 2 பந்துகளையுமே ஷார்ட் லெந்தில் பவுன்ஸர்களாக வீசினார். இதனை நம்பி ஏமாந்த பிரேஸ்வெல் அடுத்த பந்தும் அப்படி வந்தால் நன்கு திருப்பி அடிக்க வேண்டும் என்பதற்காக ஆஃப் சைடில் நன்கு ஏறி நின்றார்.

சரியான நேரம்
தனது திட்டம் சரியாக செயல்படுவதை உணர்ந்த ஷர்துல், அதற்கு அடுத்த பந்தை ஃபுல் யார்க்கராக வீசி அதிர்ச்சி கொடுத்தார். செட்டில் ஆகியிருக்கும் பேட்ஸ்மேன் யார்க்கரையும் தொட்டிருந்தால் சிக்ஸர் பறந்திருக்கும். ஆனால் வழக்கத்தை விட வேகத்தை குறைத்தும், முழுவதுமாக லெக் ஸ்டம்ப்பை குறிவைத்தும் வீசிவிட்டார். இதனால் அந்த பந்தை தொடக்கூட முடியாமல் பிரேஸ்வெல் ஏமாந்தார். இதனால் தான் அவரை லார்ட் ஷர்துல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications