இலங்கையை வீழ்த்தியது இந்தியா!-புதிய சாதனை!!

டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்தது இலங்கை. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்தது. இந்தியா ஒரு நாள் போட்டிகளில் குவித்த அதிகபட்ச ரன் இதுவேயாகும்.
415 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணிக்கு கடும் சவால் தந்தது. எனினும் ஆட்டத்தின் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை போராடி இழந்தது.
இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
முன்னதாக ஷேவாக் விளாசலால் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்களைக் குவித்தது. ஆனால் இலங்கையின் பதிலடி பேட்டிங்கால் போட்டி விறுவிறுப்படைந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 20 டுவென்டி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து இந்தியா-இலங்கை இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் இன்று ராஜ்கோட் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் துவங்கியது.
அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் மற்றும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறவில்லை. யுவராஜுக்குப் பதில் விராத் கோலி இணைந்தார்.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சங்ககாரா, முதலில் இந்தியாவை பேட் செய்ய கேட்டுக்கொண்டார்.
டெண்டுல்கர், ஷேவாக் ஜோடி களமிறங்கி வந்த பந்துகளையெல்லாம் ரன்களுக்கு விரட்டி வெளுத்து வாங்கத் தொடங்கியது.
டெண்டுல்கர் 63 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசி 69 ரன்கள் எடுத்தார். பின்னர் 19.3வது ஒவரில் தில்லாரா பெர்ணான்டோவின் பந்தில் அவுட்டானார். இருவரும் சேர்ந்து 153 ரன்கள் குவித்தனர்.
மறு முனையில் ஷேவாக் பேயாட்டத்தால் இலங்கை பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசிய ஷேவாக் 66 பந்துகளில் சதத்தைக் கடந்தார்.
அவருடன் கேப்டன் டோணியும் விளாசித் தள்ளினார். ஷேவாக் புயல் வேகத்தில் ஆடி 102 பந்துகளில் 146 ரன்களைக் குவித்து ஆட்டமிடழந்தார்.
டோணி 53 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ரவீந்திர ஜடேஜா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்களைக் குவித்ததது.
இந்தியா ஒரு நாள் போட்டிகளில் குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும்.
பின்னர் ஆடத் தொடங்கிய இலங்கை, இந்தியாவுக்கு பதிலடி தரும் வகையில் வேகமாக ஆடியது.
தரங்காவும், தில்ஷானும் இந்தியாவுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் வெளுத்து வாங்கினர். குறிப்பாக தில்ஷான் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஷேவாக்கை மிஞ்சும் வகையில் தில்ஷானும் நாலாபக்கமும் பந்துகளை விரட்டி ரன்களைக் குவித்தார்.
இந்த நிலையில் சங்கக்காரா 90 ரன்கள் எடுத்திருந்தபோது, பிரவீன் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
முரளிதரன் மருத்துவமனையில்:
இன்றைய போட்டியில் விளையாட இருந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கைவிரலில் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நடந்த பயிற்சி ஆட்டத்தில் கூட முரளி பங்கேற்கவில்லை. ஏற்கனவே விரலில் எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் சிகிச்சை எடுக்கப்பட்ட ஸ்டெர்லிங் மருத்துவமனையிலேயே முரளி இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விரலில் பெரியளவு பிரச்னை ஒன்றுமில்லை. வலி நிவாரண மருந்து கொடுத்துள்ளோம். முழு மருத்துவ அறிக்கை அணியின் மருத்துவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ஸ்டெர்லிங் மருத்துவமனை இயக்குனர் கமல் பாரிக் கூறினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் முரளி இத்துடன் 2 போட்டிகளில் விளையாடாமல் தவறவிட்டுள்ளார்.
இலங்கைக்கு அபராதம்...
இந்த நிலையில் மொஹாலியில் நடந்த டுவென்டி 20 போட்டியின்போது மிக மெதுவாக பந்து வீசியதற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி போட்டு நடுவர் ஜெப் குரோ கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள், 2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது இலங்கை.
இதற்காக கேப்டன் சங்கக்காராவுக்கு 40 சதவீத போட்டிக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அணியின் பிற வீரர்களுக்கு தலா 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்கள் சங்கக்காரா கண்காணிக்கப்படுவார். மீண்டும் இதே தவறு தொடர்ந்தால், அவருக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என்றார் குரோ.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications