மீண்டும் அதிரடியை காட்டிய தவான், கில் கூட்டணி.. வெஸ்ட் இண்டீசை காப்பாற்றிய மழை.. ஆடுகளம் மாறிவிடுமா?
போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
Recommended Video
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா வென்ற நிலையில், ஆறுதல் வெற்றியை பெறும் முயற்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
இன்றைய ஆட்டத்தில் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு, பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோல்டர் பிளேயிங் லெவனுக்கு திரும்பினார்.

பொறுப்பான ஆட்டம்
இந்த நிலையில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள், தவான், கில் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. வேகப்பந்துவீச்சாளர்களை இந்த ஜோடி அதிரடியாக எதிர்கொண்ட ரன்களை சேர்த்தது. தவறிலிருந்து திருத்தி கொள்வது தானே வாழ்க்கை. இதனால், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரானும் தனது தவறை திருத்தி கொண்டார்.

யுத்தியில் மாற்றம்
வேகப்பந்துவீச்சை இந்தியா அதிரடியாக எதிர்கொள்கிறது என்பதை உணர்ந்த அவர், திடீரென்று 7வது ஓவரிலேயே சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார். இதனால் வேகமாக ரன் குவித்து வந்த இந்திய வீரர்கள் , கொஞ்சம் நிதானமாக ஆட தொடங்கினார்கள். விக்கெட்டை கொடுக்காமல் சிங்கிள்ஸ் ஆடி ரன்களை இந்த ஜோடி சேர்த்தது.

அடுத்தடுத்து அரைசதம்
கேப்டன் ஷிகர் தவான் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். நடப்பு தொடரில் அவருக்கு 2வது அரைசதமாகும். தொடர்ந்து சுப்மான் கில்லும் 60 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். சிறப்பாக விளையாடிய தவான் வால்ஷ் பந்துவீச்சில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மழையால் பாதிப்பு
இந்த நிலையில், ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. மாலை 5 மணி வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் போட்டி கைவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணி 24 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications