முடிவுக்கு வந்ததா ஷிகர் தவான் கிரிக்கெட் வாழ்க்கை ? இந்திய அணியிலிருந்து அதிரடி நீக்கம்.. காரணம்?
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக இருந்த ஷிகர் தவான் தற்பாது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான உலககோப்பை 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தவான் நீக்கப்பட்டு இருப்பது, அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
முதலில் டெஸ்ட் போட்டியில் தனது இடத்தை இழந்த ஷிகர் தவான், கேஎல் ராகுல் வருகைக்கு பிறகு டி20, ஒருநாள் அணியில் தனது இடத்தை இழந்தார். எனினும் ஐசிசி தொடர்களில் ஷிகர் தவான் போன்று எந்த ஒரு வீரரும் செயல்பட்டது இல்லை.
இதனால் சீனியர்களுக்கு ஓய்வு வழங்கும் போது எல்லாம் ஷிகர் தவான் தான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று கொண்டு இளம் வீரர்களுக்கு தலைமை தாங்கி விளையாடினார்.

18 ரன்கள்
கடைசியாக நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது கூட ஷிகர் தவான் முதல் போட்டியில் 70 ரன்களுக்கு மேல் அடித்தார். ஆனால் அதன் பிறகு வங்கதேச தொடரில் ஷிகர் தவான் மோசமாக செயல்பட்டார். விளையாடிய 3 போட்டியை சேர்த்து வெறும் 18 ரன்கள் மட்டுமே தவான் அடித்திருக்கிறார்.

இளம் வீரர்கள்
இதனால் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது. எனினும் அந்த தொடரில் இஷான் கிஷன் அபாரமாக செயல்பட்டு, இரட்டை சதம் விளாசியதால், இதன் மூலம் ஷிகர் தவான் தனது இடத்தை இழந்துவிட்டார். ஏற்கனவே நடப்பாண்டில் தொடக்க வீரராக 600 ரன்களுக்கு மேல் விளாசி சுப்மான் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

மீண்டு வருவாரா?
இதை தவிர ருத்துராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே போன்ற தொடரில் அபாரமாக செயல்பட்டு ஃபார்ம்க்கு காத்திருக்கிறார். ரோகித் சர்மா ஏற்கனவே கேப்டனாக இருப்பதால், இனி ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் பெரிய அளவில் சாதனை படைத்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

முடிவுக்கு வந்ததா?
ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் ஷிகர் தவானின் இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. இதன் முலம் உலக புகழ் பெற்ற ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முடிவுக்கு வருகிறது. 115 முறை ஒருநாள் போட்டியில் விளையாடிய தவான், ரோகித் ஜோடி 5 ஆயிரத்து 148 ரன்களை அடித்திருக்கிறது. இந்த ஜோடி 18 முறை 100 ரன்களையும், 15 முறை 50 ரன்களையும் சேர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications