
இந்திய வீரர்கள்
இத்தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில், ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (வி.கீப்பர்), சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம், க்ருனால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சகரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அருமையான வாய்ப்பு
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடருக்கான இந்திய அணி இலங்கை புறப்பட்டு செல்கிறது. இந்நிலையில், இலங்கை கிளம்புவதற்கு முன்பு கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய கோச் டிராவிட் , "எங்களிடம் ஒரு நல்ல அணி உள்ளது, 20 வீரர்கள் உள்ளனர். இந்த குறுகிய தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. தொடரை வெல்வதற்கான சிறந்த அணி எதுவோ, அதை நாங்கள் தேர்வு செய்வோம். சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, ஷிகர் போன்ற மூத்தவர்களிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்றார்.

நம்பிக்கை
இதன் பிறகு, முதன் முதலாக ஒரு கேப்டனாக பேசிய ஷிகர் தவான், "இது ஒரு நல்ல அணி. எங்கள் அணியில் நேர்மறை, நம்பிக்கை உள்ளது, நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று எல்லோரும் நம்புகிறார்கள். மிகுந்த உற்சாகமாக உள்ளது. இத்தொடர் எங்களுக்கு ஒரு புதிய சவால், ஆனால் அதே நேரத்தில் நம் அனைவருக்கும் எங்கள் திறமையைக் காட்ட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எல்லோரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட காத்திருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே 13 - 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்துவிட்டோம். எனவே எப்போது மைதானத்தில் காலடி எடுத்து வைப்பது என்று வீரர்கள் காத்திருக்கிறார்கள்" என்று உற்சாகம் பொங்க பேசினார் தவான்.

அனுபவமும், இளமையும்
ஜுலை 13ம் தேதி தொடங்கும் இத்தொடர் ஜுலை 25ம் தேதியோடு நிறைவடைகிறது. அனைத்து போட்டிகளும் இலங்கையின் ஆர் பிரேமதாசா சர்வதேச ஸ்டேடியத்தில் தான் நடைபெற உள்ளது. தொடர்ந்து பேசிய தவான், "எங்கள் இளம் வீரர்கள் ஸ்மார்ட்டாக விளையாடுகின்றனர். இந்த போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த அணி அனுபவமும் இளமையும் கலந்த ஒரு நல்ல கலவையாகும்" என்று முடித்தார். ஆல் தி பெஸ்ட் ஷிகர் ஜி!.


Click it and Unblock the Notifications