ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஷிகர் தவான் 9-வது இடத்துக்கு முன்னேற்றம்
துபை: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஷிகர் தவான் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும், பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
பேட்டிங் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்திய வளரும் நட்சத்திரம் 27 வயதான ஷிகர் தவான் முதல் முறையாக டாப் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சதம் உள்பட மொத்தம் 159 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

மிஸ்பா உல் ஹக் சரிவு
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் இருக்கிறார்.

கோஹ்லி தொடர்ந்து முதலிடம்
இந்திய துணை கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆனால் 2-வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் வெறும் 17 புள்ளிகள் மட்டுமே அவரை விட பின்தங்கியிருக்கிறார்.

கோஹ்லி- டிவில்லியர்ஸ்
வருகிற 5-ந்தேதி தொடங்கும் இந்தியா- தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர் இவ்விரு வீரர்கள் இடையே ‘நம்பர் ஒன்' இடத்தை தக்க வைப்பது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியாகவும் இருக்கும்.

அஜ்மல் ஆதிக்கம்
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளார் சயீத் அஜ்மல் முதலிடத்தில் தொடர்கிறார்.

நரின், ஜடேஜா
மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரின் 2-வது இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

14வது இடத்தில் அஸ்வின்
இந்தியாவின் அஸ்வின் 17-வது இடத்தில் இருந்து 14-வது இடத்திற்கு வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications