மரண அடி அடித்த ஹெட்மயர்.. ஒரே ஓவரில் 5 சிக்ஸ்.. 10 பந்தில் 39 ரன்.. பைனலுக்கு சென்ற கயானா அணி
ஜார்ஜ்டவுன்: குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் கயானா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் ஒன்பதாவது போட்டியில், 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் சற்று தடுமாறிய அந்த அணி, 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது களம் புகுந்த ஷிம்ரன் ஹெட்மயர், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஃபேபியன் ஆலன் வீசிய போட்டியின் 10வது ஓவரில் ஹெட்மயர் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அந்த ஓவரின் முதல் பந்தை லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இரண்டாவது பந்தில் அவர் ஆட்டமிழக்க நேரிட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக கேட்ச் பிடிக்கப்படவில்லை, பந்து பவுண்டரி லைனுக்கு வெளியே விழுந்து சிக்ஸரானது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹெட்மயர், அடுத்தடுத்து லாங்-ஆஃப் மற்றும் டீப் மிட்-விக்கெட் திசைகளில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், கடைசி பந்தையும் சிக்ஸருக்கு விளாசி அந்த ஓவரில் மட்டும் 32 ரன்களை குவித்தார்.
இந்த அதிரடியால், 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த ஹெட்மயர், 8 பந்துகளில் 33 ரன்களை எட்டினார். கயானா அணியின் ஸ்கோர் 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களாக உயர்ந்தது. ஹெட்மயர் 10 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு மொயீன் அலி 30* ரன்கள், மற்றும் குடாகேஷ் மோட்டி 19 ரன்கள் ஆகியோரின் பங்களிப்பால் கயானா அணி 16.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் பங்களித்த குடாகேஷ் மோட்டி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணியுடன் கயானா அணி மோதவுள்ளது.


Click it and Unblock the Notifications