அடுத்த தேர்வுக்குழு தலைவர் யார்??.. ஷிவ் சுந்தர் தாஸுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ள சூழலில் அவரின் இடத்தை நிரப்பப்போகும் நபர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சேத்தன் சர்மா என்ற ஒற்றை நபர் கூறிய தகவல்களால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டுள்ளது. கடந்த சில வருடங்களாக நடந்துவந்த பிரச்சினைகளை சிறிது கூட விடாமல் தொலைக்காட்சியில் தெரிவித்துவிட்டார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் சிக்கிய சேத்தன் விராட் கோலியின் கேப்டன்சி விவகாரத்தில் அநீதி நடந்தது உண்மை தான், இந்திய வீரர்கள் ஊக்க மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள் என பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

பதவி விலகல்
இந்த விவகாரத்தில் பிசிசிஐ சார்பில் எந்தவித அறிக்கையும் இதுவரை வெளியிடப்படாமலேயே உள்ளது. விசாரணை நடத்தப்படும் என்றும் மட்டும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த சூழலில் தான் சேத்தன் சர்மா தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்றிரவு அவர் அனுப்பிய கடிதத்தை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்த தலைவர் யார்?
இந்நிலையில் அடுத்த தேர்வுக்குழு தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தோல்விக்காக பழைய தேர்வுக்குழு முற்றிலுமாக நீக்கப்பட்டது. சேத்தன் மட்டுமே மீண்டும் வாய்ப்பு பெற்றார். அவரின் குழுவில் புதிதாக சேர்ந்தவர் தான் இந்த ஷிவ் சுந்தர் தாஸ். இந்திய அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியவர் ஆவார்.

யார் இந்த ஷிவ் சுந்தர்
2000ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஷிவ் சுந்தர் தாஸ் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,326 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 சதங்களும், 9 அரைசதங்களும் அடங்கும். இதே போல 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 39 ரன்களை அடித்திருக்கிறார். எனினும் உள்நாட்டு போட்டிகளில் அவரின் ரெக்கார்ட்கள் மிகச்சிறப்பாக உள்ளதால் தேர்வுக்குழுக்குள் இணைந்தார்.

தற்காலிக பொறுப்பு
எனினும் தற்காலிக தேர்வுக்குழு தலைவராக தான் ஷிவ் சுந்தர் நியமிக்கப்படவுள்ளார். புதிய தலைவருக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை ஷிவ் சுந்தர் செயல்படுவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் வீரர்கள் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications