மும்பை: "இந்திய அணியில் எனக்கு இடம் இல்லையா? இதோ என் பேட் பேசும்!" - என தேர்வுக்குழுவை பந்தாடியது போல, தனது அதிரடி சதத்தால் பதிலடி கொடுத்துள்ளார் இந்திய ஆல்-ரவுண்டர் சிவம் துபே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து சிவம் துபே நீக்கப்பட்டார். அது நடந்த அடுத்த சில நாட்களிலேயே, ரஞ்சி டிராபி பயிற்சி ஆட்டத்தில் மும்பை அணிக்காகக் களமிறங்கி, வெறும் 62 பந்துகளில் சதம் விளாசி, பதிலடி கொடுத்துள்ளார். அதுவும் பயிற்சி டெஸ்ட் போட்டியில் டி20 ஆட்டத்தை ஆடி இருக்கிறார் சிவம் துபே.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அணியில் இடம்பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தபோது, சமீபத்திய ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஃபார்மில் இருந்த சிவம் துபேவின் மீதுதான் பலரின் பார்வையும் இருந்தது.

ஆனால், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சிவம் துபேவைப் புறக்கணித்துவிட்டு, இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பளித்தது. இது, சிவம் துபேவுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு, தனது வார்த்தைகளால் பதிலளிக்காமல், பேட்டால் பதிலடி கொடுக்க முடிவு செய்தார் சிவம் துபே. மகாராஷ்டிராவுக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி டிராபி பயிற்சி ஆட்டத்தில், மும்பை அணிக்காகக் களமிறங்கிய அவர், தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டினார். மகாராஷ்டிரா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், பந்துகளைத் தொடர்ந்து பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டார்.
வெறும் 62 பந்துகளைச் சந்தித்து, தனது சதத்தை எட்டி, தேர்வுக்குழுவினரைத் திரும்பிப் பார்க்க வைத்தார் சிவம் துபே. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வீசிய 39-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, தனது சதத்தைப் பதிவு செய்தார். சதமடித்த அடுத்த பந்திலேயே, அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து வெளியேறினார்.
ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் சிவம் துபே தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவரது அதிரடி ஆட்டம் டி20 கிரிக்கெட்டிற்கு மட்டுமே போதுமானது என்று தேர்வுக்குழு நினைத்திருக்கலாம்.
ஆனால், இந்த அதிரடி சதம், "நான் டி20 வீரர் மட்டுமல்ல, எந்த வடிவ கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்று சிவம் துபே தேர்வுக்குழுவுக்கு அனுப்பியுள்ள செய்தியாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், தன்னை நிரூபித்துள்ள சிவம் துபேவைப் புறக்கணித்தது சரியா என்ற கேள்வியை இந்தச் சதம் மீண்டும் ஒருமுறை உரக்க எழுப்பியுள்ளது. இந்த அதிரடிக்குப் பிறகாவது, தேர்வுக்குழுவின் கவனம் சிவம் துபே பக்கம் திரும்புமா?