லாகூர்: ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோவில் ஒரு இடத்தில் கூட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இல்லாதது குறித்து முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்.5ல் தொடங்கும் உலகக்கோப்பைத் தொடர், அதே மைதானத்தில் நவ.19ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியுடன் முடிவடையவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

அதேபோல் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள ஆட்டம் அக்.15ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்தப் போட்டிகள் ஒரு பக்கம் இருக்க, உலகக்கோப்பைத் தொடரை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஐசிசி மற்றும் பிசிசிஐ ஏராளமான செயல்களில் ஈடுபட்டுள்ளன.
தற்போது உலகக்கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நடிகர் ஷாரூக் கானின் பின்னணி குரலில் உருவாகியுள்ள இந்த ப்ரோமோவில், உலகக்கோப்பையின் முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அனைத்து நாடுகளின் கேப்டன்களும் வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் புகைப்படம் கூட இடம்பெறவில்லை.
அதேபோல் பாகிஸ்தான் உலகக்கோப்பையை வென்ற தருணமும் இடம்பெறவில்லை. பாகிஸ்தானின் தோல்விகளும், பாகிஸ்தான் ரசிகர்கள் சோகமாக அமர்ந்திருப்பது போன்ற ப்ரோமோ காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை ப்ரோமோவில் உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனும், பாகிஸ்தான் கேப்டனுமான பாபர் அசாம் எங்கே என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இல்லாமல் உலகக்கோப்பை ப்ரோமோவை உருவாக்குவதாக நினைத்து, மிகப்பெரிய நகைச்சுவையை செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வளருங்க பாஸ்" என்று கிண்டல் செய்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ப்ரோமோவை விளாசி வருகிறார்கள்.