கராச்சி: இந்திய டென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சோயப் மாலிக், மீண்டும் ஒருமுறை தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை மூன்றாவதாகத் திருமணம் செய்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அவர், தற்போது சனாவையும் விவாகரத்து செய்யப் போவதாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், இந்தத் தம்பதியினரிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சோயப் மாலிக்கும், சனா ஜாவேத்தும் தங்களது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சி கொடுத்தனர். அந்த அறிவிப்பு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், சோயப் மாலிக்கும், சானியா மிர்சாவும் சில மாதங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்றுவிட்டதாகச் சானியாவின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 14 ஆண்டுகால திருமண பந்தத்தில் இருந்த இந்த ஜோடிக்கு இஜான் என்ற ஒரு மகனும் உள்ளார்.
சானியாவுடனான விவாகரத்து உறுதி செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சோயப் மாலிக் சனாவைத் திருமணம் செய்தது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. சானியா மிர்சாவுடன் திருமணத்தில் இருக்கும்போதே, சோயப் மாலிக்கிற்கும் சனா ஜாவேத்திற்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், சோயப் மாலிக் - சனா ஜாவேத் தம்பதியினரின் திருமண வாழ்க்கையிலும் புயல் வீசத் தொடங்கியுள்ளதாகப் பாகிஸ்தானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீடியோ, இந்தச் சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
அந்த வீடியோவில், சோயப் மாலிக் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டிருக்க, அவருக்கு அருகிலேயே நிற்கும் சனா ஜாவேத், தனது கணவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார். சோயப் மாலிக்கும் தனது மனைவியுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாமல், அவரைத் தவிர்ப்பது போல நடந்துகொள்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இருவருக்கும் இடையே ஏதோ சரியில்லை என்பதை நெட்டிசன்கள் உறுதி செய்து வருகின்றனர். சிலர், இது கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு சாதாரண ஊடலாக இருக்கலாம் என்று நம்பினாலும், பலரும் இது பிரிவின் ஆரம்பம் என்றே கருதுகின்றனர்.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்ட மூன்றாவது மனைவியுடனும் அவரால் இணைந்து வாழ முடியவில்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விவாகரத்து வதந்திகள் குறித்து சோயப் மாலிக்கோ அல்லது சனா ஜாவேத்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.