கராச்சி: இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டென்னிஸ் முன்னாள் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இஸ்லாமிய முறைப்படி ஐதராபாத் நகரில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பின்னர், பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லை தாண்டிய இவர்களின் திருமணம், தேசிய அளவில் பேசப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இஷான் என்று பெயரிடப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரியப் போவதாக தகவல் வெளியாகின. ஆனால் கடந்த ஆண்டு மகனின் பிறந்தநாளை சானியா மிர்சா - சோயிப் மாலிக் இருவரும் துபாயில் கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டனர். இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு இவர்கள் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தனது பயோவில், "ஹஸ்பண்ட் டூ ய சூப்பர் உமன் சானியா மிர்சா" என்ற வாசகத்தை அகற்றினார். இதனால் மீண்டும் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தகவல் உச்சத்தை எட்டியது. அதுமட்டுமல்லாமல் சானியா மிர்சா கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராமில் எந்த பதிவுமிடாமல் அமைதி காத்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தற்போது பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை சோயிப் மாலிக் மற்றும் சனா ஜாவித் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சானியா மிர்சாவை சோயிப் மாலிக் பிரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சோயிப் மாலிக்கிற்கு இது 3வது திருமணமாகும். ஏற்கனவே இவர் ஆயிஷா சிக்கிக்கி தான் முதல்முதலில் திருமணம் செய்திருந்தார். 2002 முதல் 2010 வரை ஒன்றாக இருந்த இவர்கள், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.