சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக்குக்கு 3வது திருமணம் என பரவிய தகவல்.. உண்மை என்ன?
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், தான் மூன்றாவது திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பரவி வரும் வதந்திகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொய்யான மற்றும் புனையப்பட்ட செய்தி என்று கூறியுள்ள அவர், தனது மனைவி சனா ஜாவித்தை இணையத்தில் விமர்சிப்பவர்களுக்கும் தனது அறிக்கையின் மூலம் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
சானியா மிர்சாவுடன் விவாகரத்து
சோயப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரின் திருமணம் கடந்த 2023ஆம் ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்தில் முடிந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சானியா மிர்சாவை பிரிந்த பிறகு, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை கராச்சியில் சோயப் மாலிக் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். சானியா மிர்சாவை திருமணம் செய்யும் முன்பே சோயப் மாலிக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்ததாக ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனது அமைதியை தவறாகப் பயன்படுத்துகின்றனர்
இந்த நிலையில், சோயப் மாலிக் மூன்றாவது (அல்லது நான்காவது!?) திருமணம் செய்யப் போவதாகவும், சனா ஜாவித்தை பிரிய உள்ளதாகவும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சோயப் மாலிக் ஒரு விரிவான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், "2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே எனது முதல் திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது. பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்த நாங்கள், எங்கள் குழந்தையை இணைந்து வளர்க்க முடிவு செய்தோம். அதன் பிறகே நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன். எனது குடும்பத்தின் மீதான மரியாதைக் காரணமாக, எனது தனிப்பட்ட வாழ்க்கையை நான் எப்போதும் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். ஆனால், எனது அமைதியை பலரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என் மகன் படிக்கும் வயதில் இருக்கிறான்
இந்த வதந்திகளுக்குத் தான் பதிலளிக்க முக்கியக் காரணம் தனது மகன்தான் என்பதைக் குறிப்பிட்ட சோயப் மாலிக், "இந்த வதந்திகள் தற்போது எல்லையை மீறிவிட்டதால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். ஏனென்றால், வெறும் பார்வைகளுக்காகவும், அற்ப வருமானத்திற்காகவும் பரப்பப்படும் இந்த பொய்யான மற்றும் புனையப்பட்ட கதைகளைப் படித்துப் பார்க்கும் வயதில் தற்போது எனது மகன் இருக்கிறான். இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் அன்புக்குரியவர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றன" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்
மேலும், வதந்தி பரப்புபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அவர், "சமூக வலைதளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். சில லைக்குகள் மற்றும் பார்வைகளைத் தாண்டி வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன. உங்களைப் போலவே எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது.
எனது இந்த விளக்கத்திற்குப் பிறகாவது எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகளும், கேலிகளும் நிறுத்தப்படும் என்று நம்புகிறேன். ஒருவேளை இதனை மீறி தொடர்ந்து செயல்பட்டால், சம்மந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக எனது குழுவினர் மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சோயப் மாலிக் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications