கடைசி ஓவரில் அம்பயருடன் மோதிய ஸ்ரேயாஸ் ஐயர்.. வைடு தீர்ப்பு வாபஸ்.. 2 ரன்னில் தப்பிய இந்தியா
சானோ: ஜப்பானின் சானோ மைதானத்தில் நடைபெற்ற 5 ஓவர் த்ரில்லர் டி20 போட்டியில், இந்திய அணி வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுக்க, ஜப்பான் அணி 3 விக்கெட் இழந்து 30 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது. ஆனால், இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் நடுவர் எடுத்த ஒரு சர்ச்சைக்குரிய முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
20 ஓவர் போட்டியான இது மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 33 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜப்பான் அணி 4 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி ஓவரில் ஜப்பான் வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய அக்சர் படேல் 3-வது பந்தில் ஒரு வைடு கொடுத்தார். அடுத்த பந்திலும் ஜப்பான் பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயல, பந்து லெக் திசையில் சென்றதால் நடுவர் உடனடியாக வைடு சிக்னல் கொடுத்தார்.

இதை ஏற்காத அக்சர் படேல் மற்றும் சஞ்சு சாம்சன் நடுவரிடம் அதிருப்தியை பதிவு செய்தனர். உடனே களத்தில் இறங்கிய இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், லெக் நடுவரிடம் சென்று மிகத் தீவிரமாக முறையிட்டார். இதையடுத்து இரு நடுவர்களும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ஏற்கனவே கொடுத்த வைடு தீர்ப்பை ரத்து செய்து, அதனை சரியான பந்து என அறிவித்தனர்.
இந்த ஒரு முடிவுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்தியா வென்றதே வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில்தான். ஒருவேளை அந்த வைடு ரன்னும் கூடுதல் பந்தும் ஜப்பானுக்கு வழங்கப்பட்டிருந்தால், ஆட்டம் டிரா ஆகியிருக்கலாம் அல்லது ஜப்பான் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கவும் அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.
ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும்போது லெக் சைடு வைடு விதி மாறினாலும், இந்திய கேப்டனின் தலையீட்டிற்குப் பிறகே நடுவர் தனது தீர்ப்பை மாற்றியது முறையானதுதானா என்ற கேள்வியை கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications


