இப்படியா பண்ணுவீங்க? கோலி இடத்துக்கே ஆப்பு வைத்த ஸ்ரேயாஸ்.. ஒருநாள் விட்டது தப்பா போச்சே!
இந்தூர் : விராட் கோலியின் பேட்டிங் வரிசையை தட்டிப் பறிக்க ஸ்ரேயாஸ் ஐயர் வந்து விட்டதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேசத் துவங்கி விட்டனர்.
அதற்கு காரணம், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடிய ஆட்டம் தான்.

ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக முதுகு வலி காரணமாக கிரிக்கெட் விளையாட்டை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்தது.
அதன் பின் மீண்டும் அவர் கிரிக்கெட் பயிற்சி செய்து இந்திய அணிக்கு திரும்பினார். 2௦23 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் அவரை ஆட வைக்க முயற்சி செய்தது இந்திய அணி நிர்வாகம்.
ஆசிய கோப்பை தொடரில் அவர் தன் ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சரியாக ஆடவில்லை. இந்த நிலையில், அவரை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கக்கூடும் என்ற பேச்சுக்களும் அடிபட்டன.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவருக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரின் முதல் போட்டியில் அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார்.
அதன் பின் இரண்டாவது போட்டியில் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இந்தூர் ஆடுகளம் அடித்து ஆட சிறந்த ஆடுகளம் என்ற நிலையில், மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆட ஸ்ரேயாஸ் ஐயரை அனுப்பியது இந்திய அணி.
விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் ஆடாததால், ஸ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் கோலி இறங்கும் மூன்றாம் வரிசையில் ஆடினார். துவக்கம் முதலே அதிரடி காட்டிய அவர் 90 பந்துகளில் 105 ரன்கள் குவித்த பின் தான் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் தன் பார்மை நிரூபித்த ஸ்ரேயாஸ் ஐயர், அப்படியே விராட் கோலி இடத்துக்கும் துண்டைப் போட்டு இருக்கிறார். எப்படி என்றால், இதுவரை ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடும் போதெல்லாம் அதிக ரன்களை குவித்து இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் களமிறங்கி குவித்த ரன்கள் போட்டி வாரியாக - 9(27), 88(70), 65(63), 54(57), 63(71), 44(34), 80(76), 49(59), 82(102), 3(8), 105(90)
மூன்றாம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 11 இன்னிங்க்ஸில் 642 ரன்கள் குவித்துள்ளார் இதன் சராசரி 58.36 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 97.71 ஆகும். விராட் கோலிக்கு மாற்று வீரர் தயாராகி விட்டார் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications