IND vs NZ: முதுகில் குத்தப்பட்ட வீரரால் தான் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.. ரியல் ஹீரோ ஸ்ரேயாஸ்
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இதற்கு காரணமே கடந்த ஆண்டு பிசிசிஐயால் முதுகில் குத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட வீரர்தான் என ரசிகர்கள் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர் வேறு யாருமல்ல ஸ்ரேயாஸ் ஐயர்தான்.
இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 243 ரன்களை சேர்த்திருந்தார். விராட் கோலி 218 ரன்கள் சேர்த்த நிலையில், அவரை விட அதிக ரன் சேர்த்திருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களுக்கு மேல் சேர்த்து தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்து வந்தார். இறுதிப் போட்டியிலும் கடும் அழுத்தத்துக்கு இடையே அவர் 48 ரன்கள் சேர்த்திருந்தார்.

இப்படிப்பட்ட ஒரு வீரரை தான் பிசிசிஐ கடந்த ஆண்டு நியாயமே இல்லாத, பொய்யான ஒரு காரணத்திற்காக இந்திய அணியில் இருந்து நீக்கியது. பிசிசிஐ ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் சதம் அடித்து நியூசிலாந்து அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
அந்த உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். அதை ஏற்காமல் அவரது பேட்டிங் சரியில்லை என அணியில் இருந்து நீக்கியது இந்திய அணி நிர்வாகம். மேலும், அவரை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு கூறியது.
ஆனால், முதுகு வலி இருந்ததால் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடவில்லை. அதை காரணமாக காட்டி அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அதன் பின் சில மாதங்களுக்கு அவருக்கு இந்திய டி20 அணி மற்றும் ஒரு நாள் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
ஆனால், அதே ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்து 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். அதன் பின் 2024 ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.
அடுத்து 2024 சையது முஸ்தாக் அலி டிராபி, விஜய் ஹசாரே தொடர்களில் அபாரமாக விளையாடி மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதை தொடர்ந்து தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் சேர்த்த வீரராகவும், நிலையாக ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்த வீரராகவும் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கோப்பை வென்ற பின் இந்திய வீரர்களுக்கு வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது. அப்போது ஜெய் ஷா முன்னிலையில் மிகவும் கெத்தாக நடந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ தலைவர் ஸ்டூவர்ட் பின்னியிடம் அதை வாங்கி அணிந்தார். அதை குறிப்பிட்டு பிசிசிஐக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தனது அருமையை உணர்த்தி இருக்கிறார், அவர்தான் ரியல் ஹீரோ, தன்னை தூக்கி எறிந்தவர்களையே தனக்கு பரிசளிக்க வைத்தார் என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications