மும்பை: அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் சில ஏமாற்றங்களும், சில ஆச்சரியங்களும் இருந்தன. குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்தியா ஏ அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 480 ரன்கள் குவித்திருந்தார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். அதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அதே சமயம், இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விளையாடுவதில் சந்தேகமும் இருந்தது. ஏனெனில், அவருக்கு ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் பலவீனம் இருந்தது. ஆனால், தற்போது அவர் அது போன்ற பலவீனத்தை வெளிப்படுத்தவில்லை. எனினும், தேர்வுக் குழு ஸ்ரேயாஸ் ஐயரை புறக்கணித்திருக்கிறது.
இந்தியா ஏ அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த டெஸ்ட் அணி கேப்டனாகப் பார்க்கப்படும் சுப்மன் கில் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சாய் சுதர்சன் ஆகியோர் இரண்டாவது போட்டியிலிருந்து விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், அவர்கள் இருவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் சூழ்நிலையில் உள்ளது.
இந்தியா ஏ அணியின் முதல் போட்டி ஐபிஎல் பிளே ஆஃப் தொடரின்போது நடைபெறும். எனவே, அவர்கள் இருவரும் முதல் போட்டியில் விளையாட முடியாது. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இரண்டாவது போட்டியிலிருந்து இந்தியா ஏ அணியில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புடன் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், ஸ்ரேயாஸ் ஐயர் கூட இரண்டாவது போட்டியிலிருந்து இந்தியா ஏ அணியில் இடம் பெற முடியும். ஆனால், அவரது பெயர் இந்தியா ஏ அணியில் அறிவிக்கப்படவில்லை.
மேலும், மிடில் ஆர்டரில் பல்வேறு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தியா ஏ அணியில் கருண் நாயர், சர்பராஸ் கான், இஷான் கிஷன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. இத்துடன் டெஸ்ட் அணியில் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் இருப்பார்கள். இப்படி பல்வேறு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவரது முந்தைய பலவீனத்தை ஒரு சாக்காக வைத்து தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது. பிசிசிஐ வட்டாரத்தில் ஒரு முக்கியத் தகவலும் கூறப்படுகிறது:
"ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில்தான் முதலில் வாய்ப்பு அளிக்கப்படும். ஏனெனில், அவரது வேகப்பந்துவீச்சு பலவீனம் குறித்து முழுமையாகப் பரிசோதித்த பிறகே அவருக்கு மீண்டும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படும்" எனக் கூறப்படுகிறது.
இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே
குறிப்பு: சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார்கள்.