Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசியூ-வில் ஸ்ரேயாஸ்.. அவசர விசா வேண்டும்.. தவிக்கும் பெற்றோர்.. பிசிசிஐ உதவிக்கரம்.. என்ன நடந்தது?

சிட்னி: இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் பயங்கர காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோர் சிட்னி செல்ல அவசர விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகனின் காயத்தின் தன்மையை அறிந்து அவருடன் இருக்க முடிவு செய்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். பிசிசிஐ அவர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சனிக்கிழமையன்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஒரு கடினமான கேட்சை பிடித்தபோது, ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடது பக்கமாக, குறிப்பாக முழங்கை மற்றும் விலா எலும்புகளில் பலமாகத் தரையில் மோதினார். கேட்சை முடித்த உடனேயே வலியால் துடித்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Shreyas Iyer ICU Admission Parents Seek Emergency Visa to Visit Sydney BCCI Confirms Spleen Laceration Injury

மண்ணீரல் சிதைவு காயம் - பிசிசிஐ உறுதி

ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பீல்டிங்கின் போது ஸ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க கீழ் விலா எலும்பு பகுதியில் அடிபட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது மண்ணீரலில் சிதைவு காயம் (laceration injury to the spleen) ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது" என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "ஸ்ரேயாஸ் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் அவர் காயத்திலிருந்து நன்கு குணமடைந்து வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய அணி மருத்துவர், ஸ்ரேயாஸுடன் சிட்னியிலேயே தங்கி அவரது அன்றாட முன்னேற்றத்தைக் கண்காணிப்பார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்த போதிலும், காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவரது பெற்றோர் உடனடியாக சிட்னிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் அபாய கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாக கூறப்பட்டாலும் அவரது காயம் மோசமானது என்பதால் அவருடன் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அருகில் இருப்பது அவசியம்.

இந்த நிலையில் அவரது பெற்றோர் ஆஸ்திரேலியா செல்ல அவசர விசாவுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நடைமுறையை துரிதப்படுத்தவும், ஆஸ்திரேலியா செல்ல தேவையான பயண ஏற்பாடுகளை கவனிக்கவும் பிசிசிஐ உதவி வருகிறது.

(தற்போதைய தகவல்: திங்கள்கிழமை இரவு ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியூவில் இருந்து வெளியே வந்துவிட்டதாகவும், அதே சமயம், உள்காயம் குணமாகும் வரை, குறைந்தபட்சம் ஏழு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. அந்த உள்காயத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது.)

தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்பது சந்தேகம்

இந்தக் காயம் காரணமாக, வரும் நவம்பர் 30ஆம் தேதி உள்நாட்டில் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது பெரும் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டரின் முதுகெலும்பாகக் கருதப்படும் அவர், விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஸ்ரேயாஸ் ஐயரின் சமீபத்திய ஃபார்ம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில், 2 போட்டிகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார். குறிப்பாக, அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 61 ரன்கள் குவித்து, ரோகித் சர்மாவுடன் இணைந்து சதக் கூட்டணி அமைத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த ஆண்டில் மட்டும், 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 49.60 என்ற அபார சராசரியில் 496 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிரடியான ஃபார்ம் அணியின் வெற்றிக்கு மிக முக்கியம் என்பதால், அவரது காயம் அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.

Story first published: Monday, October 27, 2025, 16:57 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+