பிளேயிங் லெவனா.. கேப்டனே இவர்தான்.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஜாக்பாட் வாய்ப்பு.. பிசிசிஐ வட்டாரம் தகவல்
மும்பை: 2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ உயர் அதிகாரிகளை ஈர்த்து இருப்பதாகவும், விரைவில் அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பந்தயத்தில் அவரது பெயர் சேர்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து அவருக்கு டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது நடந்தால் எதிர்காலத்தில் அவரே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் வாய்ப்பு உள்ளது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றார். அந்த அணி இதற்கு முந்தைய ஆண்டுகளில் மிகவும் மோசமாக செயல்பட்ட அணியாக இருந்தது. அதனால் அந்த அணி முற்றிலும் அதன் வீரர்களை நீக்கிவிட்டு ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கியது. அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். அவர் தான் வீரர்களைத் தேர்வு செய்தார். அதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் வாங்கிய அந்த அணி அவரை கேப்டனாக நியமித்தது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய அணிகளில் இடம் பெறாத ஐந்து இளம் வீரர்களைத் தனது அணியில் வைத்து ஆடியது. அந்த வீரர்களை சிறப்பாக வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியிலும் கடைசி பந்து வரை போராடிய அந்த அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், அவரது கேப்டன்சி செயல்பாடு குறித்து பிசிசிஐ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுந்து உள்ளதாகவும், அவர் மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றது குறித்து அவர்கள் குறிப்பிட்டுப் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் உள்ளனர். இவர்களில் சுப்மன் கில் தான் வருங்காலத்தில் மூன்று அணிகளின் கேப்டனாகவும் இருப்பார் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
ஆனால், அவரது பேட்டிங் செயல்பாடு ஒருநாள் போட்டியில் தவிர மற்ற வடிவங்களில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனினும், அவருக்கு மறைமுக ஆதரவு இருப்பதால் தான் கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் இடம் பிடித்தால், அவரது பேட்டிங் செயல்பாடு மற்றும் தலைமைப் பண்பின் காரணமாக அவரே மூன்று அணிகளின் கேப்டனாகவும் நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் இருப்பதே சரியான முடிவாக இருக்கும் என பலரும் கருதுகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது மிகப்பெரும் மரியாதை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது கேப்டன்சி இருந்து உள்ளது. இது போன்ற ஒரு நபர்தான் இந்திய அணியை வழிநடத்த முடியும்.
உதாரணமாக, தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கேப்டன் என்று சொல்வது இயல்பாகவே இளம் வீரர்கள் மத்தியில் ஒரு மரியாதை உணர்வை ஏற்படுத்தியது. அது அணியை வழிநடத்துவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சுப்மன் கில் அந்த மரியாதையைப் பெறுவாரா என்ற கேள்வி உள்ளது.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் இப்போதே அதை பெற்று விட்டார். ஐபிஎல் ஆடும் இளம் இந்திய வீரர்கள் மத்தியில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் இந்திய அணியின் கேப்டன் ஆவாரா என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications