ஸ்ரேயாஸ் ஐயர் உயிரை காப்பாற்றியதே இவர்தான்.. ஒரு நொடி கூட தாமதிக்காமல்.. பாராட்டிய மருத்துவர்
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட விலா எலும்புக் காயம், அவரது உயிருக்கே ஆபத்தை விளைவித்ததாகவும், ஆனால் சரியான நேரத்தில் பிசிசிஐ மருத்துவக் குழு எடுத்த உடனடி நடவடிக்கையால் அவர் உயிர் பிழைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ் கேரியின் கடினமான கேட்ச்சை அபாரமாகப் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இடது பக்க விலா எலும்பில் அவருக்கு பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவரை, சக வீரர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு அழைத்துச் சென்றனர்.

முதலில் இது ஒரு சாதாரண காயம் என்றே கருதப்பட்டது. ஆனால், ஓய்வறைக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென சரிந்து விழுந்ததாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது நாடித்துடிப்பு அபாயகரமான அளவுக்குக் குறைந்ததையடுத்து, மைதானத்தில் இருந்த பிசிசிஐ மருத்துவக் குழுவினர் ஒரு நொடியும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டனர்.
உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழு:
அவருக்கு ஏற்பட்ட காயம் வெறும் வெளிக்காயம் அல்ல, அது உள் இரத்தக் கசிவை ஏற்படுத்தியிருப்பதை மருத்துவக் குழுவினர் உடனடியாகக் கண்டறிந்தனர். இதையடுத்து, உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது மண்ணீரலில் (Spleen) கிழிவு ஏற்பட்டு உள் இரத்தக் கசிவு உண்டானது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க கீழ் விலா எலும்புப் பகுதியில் அடிபட்டது. ஸ்கேன் பரிசோதனையில் அவரது மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் அவர் குணமடைந்து வருகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர் பாராட்டு:
ஐசிசி மருத்துவக் குழுவின் தலைவரும், பிசிசிஐ மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரபல மருத்துவர் டின்ஷா பர்திவாலா, ஸ்ரேயாஸ் ஐயரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தார். ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை அளித்ததில் முக்கியப் பங்காற்றிய இவர், பிசிசிஐ-க்கு அனுப்பிய மின்னஞ்சலில், களத்தில் இருந்த மருத்துவக் குழுவினரின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அந்த மின்னஞ்சலின் நான்காவது மற்றும் கடைசிப் புள்ளியில், "களத்தில் இருந்த மருத்துவக் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் சரியான நேரத்திலான நோய் குறித்த புரிதலும், உடனடி நடவடிக்கையும் ஸ்ரேயாஸ் உயிரைக் காப்பாற்றியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.
தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிட்னியில் உள்ள அவரது நண்பர்கள் அவருடன் இருப்பதாகவும், அவரது பெற்றோர் மும்பையில் இருந்து விரைவில் அவரைப் பார்க்க சிட்னிக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications