Shreyas Iyer: ஸ்ரேயாஸ் ஐயருடன் பேசிவிட்டேன்.. இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் அப்டேட்!
சிட்னி: ஸ்ரேயாஸ் ஐயருடன் 2 நாட்களாக பேசி வருகிறேன் என்றும், அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதல் நாள் சிகிச்சை முடிந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறிய சூர்யகுமார், செல்ஃபோனில் அவரால் பதில் அளிக்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ் கேரி அடித்த கேட்ச் பிடித்தார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பின்னாடி ஓடி சென்று பந்தை பிடித்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஓய்வறைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், பின் ஸ்கேன் எடுக்க சென்றார்.

ஸ்கேனில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பிசிசிஐ மருத்துவர்கள் உட்பட பலரும் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயரின் பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.
மண்ணீரலில் ஏற்பட்ட காயம் ஸ்ரேயாஸ் ஐயரின் உயிருக்கே ஆபத்து என்பதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதில் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிந்த உடனேயே அவருக்கு செல்ஃபோனில் அழைத்தேன். ஆனால் அவரிடம் செல்ஃபோன் இல்லை.
இதன்பின் எங்களின் பிசியோ கமலேஷ் ஜெய்ன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இருப்பது தெரிய வந்தது. அவர் ஸ்ரேயாஸ் ஐயர் நன்றாக இருப்பதாக கூறினார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதல் நாள் சிகிச்சை முடிந்துள்ளது. அவர் நன்றாக இருக்கிறார் என்பதை மட்டுமே சொல்ல முடியும். கடந்த 2 நாட்களாகவே ஸ்ரேயாஸ் ஐயருடன் பேசுகிறோம். அவரால் எங்களுக்கு பதில் அளிக்க முடிகிறது. செல்ஃபோனில் பேச முடிகிறது.
ஸ்ரேயாஸ் ஐயருடன் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரேயாஸ் இருக்க வேண்டும். அவர் அனைவருடனும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்த போது சாதாரணமாகவே இருந்தார். வெளியில் இருந்து பார்க்கும் போது எதுவும் தெரியவில்லை.
அவர் ஓய்வறைக்கு வந்த பின்னரே, ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடுதல் சிகிச்சை தேவை என்பது தெரிய வந்துள்ளாது. பின்னர் மருத்துவரிடம் கொண்டு சென்ற போதும் ஸ்ரேயாஸ் ஐயர் சாதாரணமாகவே பேசி இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் கீழே விழுந்த போதே காயம் ஏற்பட்டது என்பதை எங்களால் உணர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications