ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்த ஜாக்பாட்.. விராட் கோலி ஓய்வால் கிடைக்கப் போகும் டெஸ்ட் அணி வாய்ப்பு
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவரது இடத்தில் யாரை ஆட வைப்பது என்ற சந்தேகம் இருந்தது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயரை விளையாட வைப்பது குறித்துத் தேர்வு குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 811 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். 24 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை அவர் சேர்த்திருக்கிறார். ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 36.86 என்பதாக உள்ளது. அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரியாகவே அமைந்திருந்தாலும், தற்போது அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக விளையாடினார். அதைத் தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்நாட்டுப் போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்களை சேர்த்திருந்தார். அவர் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் குவித்து தனது பேட்டிங் ஃபார்மை நிரூபித்திருக்கும் நிலையில், விராட் கோலி இடத்தில், சர்வதேச அனுபவம் பெற்ற ஆளுமை திறனுடைய ஒரு வீரர் விளையாட வேண்டும் என்றால், அது ஸ்ரேயாஸ் ஐயர் தான் எனத் தேர்வு குழு தற்போது ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இந்திய அணி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவரது பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஐபிஎல் தொடர், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு அவர் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் பிசிசிஐ-யிடம் நற்பெயரை பெற்றிருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒப்பந்தமும் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெறுவார் எனக் கூறப்படுகிறது. அதற்கேற்ப விராட் கோலி ஓய்வு பெறுவது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பின் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications