அதிரடி செஞ்சுரி.. இனி யாருமே பேசக் கூடாது.. ஒவ்வொரு பந்தையும் ஓங்கி அடித்த ஸ்ரேயாஸ்.. மாறிய கதை
இந்தூர் : இந்திய அணியில் கடந்த சில போட்டிகளில் மோசமாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார்.
இந்திய அணியின் உலகக்கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் பல மாதங்களாக முதுகில் ஏற்பட்ட வலி மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக இந்திய அணி ஆடிய போட்டிகளில் ஆடவில்லை.

நீண்ட காலத்திற்கு பின் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். உலகக்கோப்பை தொடருக்கு முன் தன் ஃபார்மை நிரூபிக்க அவருக்கு கிடைத்த அந்த வாய்ப்பில் அவர் சொதப்பினார்.
மேலும், ஒரே ஒரு போட்டியில் ஆடிய பின் அவருக்கு மீண்டும் முதுகு வலி வந்தது. அப்போது இப்படி ஒரு வீரரை அணியில் வைத்திருக்க வேண்டுமா? என சிலர் கேள்வி எழுப்பினர். அதன் பின் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவருக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 3 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்தார். அப்போது அவர் மீதான விமர்சனம் பல மடங்கு அதிகரித்தது. அவர் உலகக்கோப்பை தொடருக்கு செல்லவே மாட்டார் என்றெல்லாம் கூறினர்.
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவர் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். துவக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அவருக்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.
தன் ஃபார்மை நிரூபிக்க கிடைத்த அரிய வாய்ப்பு என்பதால், துவக்கம் முதலே பவுண்டரி அடித்து தெறிக்க விட்டார். ஆஸ்திரேலிய அணியின் அறிமுக பவுலர் ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 5வது ஓவரில் இரண்டு ஃபோர் அடித்தார்.
அதற்கு அடுத்த ஓவரில் ஹேசல்வுட் பந்துவீச்சை சிதறவிட்டு இரண்டு ஃபோர் அடித்தார். 10வது ஓவரில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட போது அவர் 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்து இருந்தார். ஆறு ஃபோர் அடித்து இருந்தார்.
அதன் பின் மழைக்கு பின் ஆட்டம் துவங்கிய போதும் அதே அதிரடியை தொடர்ந்த ஸ்ரேயாஸ் இந்த முறை சிக்ஸர்களையும் பறக்க விட்டார். 86 பந்துகளில் 10 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து சதம் கடந்தார்.
இந்த அதிரடி சதம் மூலம் அணியில் தன் இடத்தையும் உறுதி செய்ததோடு, தன் ஃபார்ம் குறித்து பேசிய அனைத்து விமர்சகர்கள் வாயையும் சேர்த்தே அடைத்தார்.


Click it and Unblock the Notifications