லக்னோ: ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அணியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இந்த திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் இருந்து உடனடியாக மும்பை திரும்பிய ஸ்ரேயாஸ், தனது விலகலுக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே இந்தியா 'ஏ' மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது.

இந்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து விலகியதால், முதல் போட்டியில் துணை கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜுரல், அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக மாற்று வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை.
"ஆமாம், ஸ்ரேயாஸ் ஒரு சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு மும்பை திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தன்னால் விளையாட முடியாது என்று அவர் தேர்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும்போது, மிடில்-ஆர்டர் இடத்திற்கான போட்டியில் அவர் தொடர்ந்து நீடிப்பார்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சமீப காலமாக ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் ஃபார்ம் டெஸ்ட் வடிவத்தில் சிறப்பாக இல்லை. ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 13 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதுவும், தவறான எல்பிடபிள்யூ தீர்ப்பால் அவர் ஆட்டமிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு, துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியிலும் அவர் 25 மற்றும் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்றார். அவர் 5 போட்டிகளில் 243 ரன்கள் குவித்தார். இருந்தபோதிலும், தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் முனைப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டார். தற்போது இரண்டாவது போட்டிக்கு முன் அவர் இந்தியா 'ஏ' அணியில் இருந்து திடீரென விலகியிருப்பது, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே, பிசிசிஐ அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் தான் அவர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு கிடைத்த இந்தியா ஏ வாய்ப்பையும், இந்தியா ஏ கேப்டன் பதவியையும் விடுத்து அவர் போட்டியில் இருந்து விலகி இருப்பது அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது.
இந்தியா 'ஏ' அணியில் மற்றொரு மாற்றமாக, வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுக்கு பதிலாக முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறார். காயம் காரணமாக ஆந்திர ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இன்னும் முழுமையாகக் குணமடையாததால், இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இந்தியா 'ஏ' மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்த இரண்டாவது போட்டி, இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்கக் காத்திருக்கும் பல இளம் வீரர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.