மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவு, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான தொடரில் இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த 29 வயதான ஸ்ரேயாஸ் ஐயர், லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகினார்.
இதைத் தொடர்ந்து, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்ட தேர்வாளர்களுடன் விரிவாக ஆலோசித்த பிறகு, தனது முடிவை மின்னஞ்சல் மூலம் பிசிசிஐக்கு அவர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த மின்னஞ்சலில், தனது உடல் இனி சிவப்புப் பந்து கிரிக்கெட்டின் கடினமான தன்மையை தாங்காது என்று ஸ்ரேயாஸ் விளக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு முதுகு வலி இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேல் களத்தில் நிற்பது தனக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், இது நீண்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாடுவது சாத்தியம் இல்லாத ஒன்றாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடியபோதும், அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டியிருந்ததாகவும், இது சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது இந்தியா 'ஏ' போட்டிகளிலோ ஆடுவது சாத்தியமில்லை என்றும் அவர் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
"ஸ்ரேயாஸ் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது நிலையைத் தெளிவுபடுத்தியது நல்லது. ஏனெனில், தேர்வாளர்களுக்கு இப்போது அவரது எதிர்காலம் குறித்து ஒரு தெளிவு கிடைத்துள்ளது. வரும் மாதங்களில் அவர் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் விளையாட மாட்டார். எதிர்காலத்தில் தனது உடல்நிலையை பிசியோ மற்றும் பயிற்சியாளருடன் ஆலோசித்து ஒரு முடிவை எடுப்பார் என்று அவர் பிசிசிஐ-இடம் கூறியுள்ளார்" என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் பரிசீலிக்கப்பட்டு வந்தார். அதற்கான ஒரு பயிற்சியாகவே அவர் இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது இந்த திடீர் முடிவு, அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்தையே தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி பரவலான பாராட்டுகளைப் பெற்றார். அவரது சிறப்பான ஃபார்முக்கு மத்தியிலும், ஆசிய கோப்பைக்கான அணியில் அவர் புறக்கணிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது நினைவுகூரத்தக்கது. தற்போது அவரது டெஸ்ட் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.