"இந்திய அணியில் தவறுகள் நடக்கத்தான் செய்யும் ஏன்னா ".. தொடரை இழந்து விட்டு ஸ்ரேயாஸ் சப்பைக்கட்டு
பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் படுதோல்வி அடைந்து தொடரைக் கோட்டைவிட்டது இந்திய அணி. இந்த மோசமான நிலை குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது அணி ஒரு மாற்றத்திற்கான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருப்பதாகவும், தவறுகளிலிருந்து வீரர்கள் விரைவில் பாடம் கற்பார்கள் என்றும் சப்பைக்கட்டு கட்டி இருக்கிறார்.
பிரிஸ்டலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சைத் துவம்சம் செய்து வெறும் 13.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையிலேயே இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "மீண்டும் ஒரு ஏமாற்றம் அளிக்கும் தோல்வி கிடைத்துள்ளது. இந்த பிட்ச்சில் 158 ரன்கள் என்பது வெற்றிக்கான போதுமான ஸ்கோர் இல்லை. அவர்கள் எவ்வளவு வேகமாக அந்த இலக்கை எட்டினார்கள் என்பதை நாம் பார்த்தோம். பந்துவீசத் தொடங்கும் போது, விக்கெட்டுகளுக்கு நேராக அதே லென்த்தில் பந்துவீசுமாறு பந்துவீச்சாளர்களிடம் கூறினேன். ஆனால், திட்டங்களைச் செயல்படுத்துவதில் எங்களது வீரர்களிடம் பெரிய குறைபாடு இருந்தது" என்றார்.
தனி ஆளாகப் போராடி 80 ரன்கள் குவித்தது குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ், "எனது சொந்த ஆட்டம் திருப்தியளித்த போதிலும், அது அணியின் வெற்றிக்கு உதவாத போது அதில் எந்தப் பயனும் இல்லை. இந்திய அணி தற்போது ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். தட்பவெப்ப நிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப விளையாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும்" என்று ஏற்க முடியாத ஒரு காரணத்தை முன்வைத்தார்.
"எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்து கொண்டு, தங்களது தவறுகளிலிருந்து மிக வேகமாகப் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்" எனவும் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்தார்.
அயர்லாந்திடம் 2 போட்டிகளில் தோற்ற இந்திய அணி, இங்கிலாந்திடமும் தொடரை இழந்து தொடர்ந்து 6 டி20 போட்டிகளில் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் தவித்து வருகிறது. ஆனால், ஆறு போட்டிகளாக இந்திய அணி மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என ஏற்க முடியாத காரணத்தை முன்வைத்து வருகிறார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.


Click it and Unblock the Notifications
