உயிருக்கு போராடிய ஸ்ரேயாஸ் ஐயர்.. இரண்டே மாதத்தில் ஃபீனிக்ஸ் பறவை போல் செய்த சம்பவம்
மும்பை: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தனது அடிவயிற்று காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். டிசம்பர் 24 அன்று மும்பையில் ஒரு மணிநேரம் பேட்டிங் பயிற்சி செய்த அவர், தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையம் செல்கிறார். காயம் ஏற்பட்ட பிறகு, நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுடன் பொதுவெளியில் அவர் வந்தார்.
கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டதால், ஷ்ரேயஸ் ஐயர் சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்களைத் தவறவிட்டார். வயிற்றில் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதால், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டார்.

இந்தக் காயத்தால் அவர் நீண்ட காலம் களத்தில் இருந்து விலகியிருந்தார். ஸ்ரேயாஸ் ஐயரின் கம்பேக் தேதி இன்னும் உறுதியாகவில்லை. விஜய் ஹசாரே டிராபியில் களமிறங்க அவர் ஆர்வமாக இருப்பினும், இதற்கான பிசிசிஐ மையத்தில் அவருடைய உடல்தகுதி குறித்து சோதனை மேற்கொள்ளப்படும்.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், "ஸ்ரேயஸ் ஐயருக்கு ஆஸ்திரேலியாவில் மிக துரதிர்ஷ்டவசமான காயம் ஏற்பட்டது. அவர் தற்போது வலியின்றி மும்பையில் பேட்டிங் செய்தது நல்ல விஷயம். நியூசிலாந்து தொடர் சற்று சவாலாக இருக்கலாம், ஆனால் விஜய் ஹசாரே டிராபியின் பிற்பகுதிகளில் அவர் திரும்புவதை நிராகரிக்க முடியாது."
"அவர் ஏற்கனவே ஜிம்மில் வழக்கமான பயிற்சிக்குத் திரும்பிவிட்டார். தற்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. பிசிசிஐ மையத்தின் மதிப்பீட்டைப் பொறுத்தே அனைத்தும் அமையும். அவரை அவசரப்படுத்த மாட்டோம். இருப்பினும், விரைவாக அணிக்கு திரும்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டார்.
ஐயர் பெங்களூரில் உள்ள பிசிசிஐ மையத்தில் நான்கு முதல் ஆறு நாட்கள் தங்குவார். அங்கு அவரது உடல்நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அணிக்குத் திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். அவர் ஏற்கனவே ஜிம் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார். ஸ்கேன் ரிப்போர்டும் இயல்பாகவே உள்ளன.
இந்தியா ஜனவரி 11 முதல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அணி ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதி அறிவிக்கப்படலாம். இந்தத் தொடரில் ஐயர் இடம்பெறுவது கேள்விக்குறியே. இருப்பினும், வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications