IPL 2025 Final: அம்பயர் அவுட்டே தரலை.. ஆடுகளத்தை விட்டு வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர்.. என்ன நடந்தது?
அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அம்பயர் அவுட் தராத நிலையில் தாமாகவே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணி கடும் அழுத்தத்திற்கு உள்ளானது.
இந்த இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து, இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருந்தது. 191 ரன்கள் என்ற வெற்றி இலக்கு, அகமதாபாத் மைதானத்தில் எட்டக்கூடிய இலக்காகவே கருதப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில் 24 ரன்களுடனும், பிரப்சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அவர்கள் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தாலும், அதிரடியாக ரன் சேர்க்கத் தவறியதால், அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகரித்தது.
ஒருபுறம் ஜோஸ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி வந்த நிலையில், நான்காம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறினார். அவர் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் ஓவரில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சாதாரணமாக வந்த பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டிவிட ஸ்ரேயாஸ் ஐயர் முயன்றார். ஆனால், பந்து பேட்டின் வெளிப்புற விளிம்பில் பட்டு (அவுட் சைட் எட்ஜ்) நேராக ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவிடம் சென்றது. அதைப் பிடித்த ஜித்தேஷ் சர்மா, அவுட் என அப்பீல் செய்து துள்ளிக் குதித்தார்.
விராட் கோலி மற்றும் மற்ற ஆர்சிபி வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஆனால், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால், ஆர்சிபி அணி ரிவ்யூ எடுப்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தாமாகவே அவுட் ஆனதை ஒப்புக் கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
ஐபிஎல் இறுதிப் போட்டி போன்ற முக்கியமான தருணத்தில், நடுவர் அவுட் கொடுக்காத வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், தனது நேர்மையை வெளிப்படுத்தும் விதமாக, பந்து பேட்டில் பட்டதை (அவுட் சைட் எட்ஜ்) ஒப்புக்கொண்டு அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது பாராட்டுக்குரிய ஒன்றாக இருந்தது. அதே சமயம் அவரது பொறுப்பற்ற ஷாட் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அவரது இந்த நேர்மையான முடிவுக்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணி மேலும் அழுத்தத்திற்கு உள்ளானது. அதிரடியாக ஆடிவந்த ஜோஸ் இங்கிலிஸ், 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications