ஸ்ரேயாஸ் மனமுடைந்து போய் விடுவார்.. ஷாரூக் கானுக்கு இது தெரியாதா? KKR கேப்டன் நிலை இதுதான்
கொல்கத்தா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது. ஏனெனில், ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அப்படி தக்க வைக்கப்படும் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு சம்பளம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ விதிகளை வெளியிட்டு உள்ளது.
அதன்படி இரண்டு வீரர்களுக்கு தலா 18 கோடி ரூபாயும், இரண்டு வீரர்களுக்கு தலா 14 கோடி ரூபாயும், ஒரு வீரருக்கு 11 கோடி ரூபாயும் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உள்ளூர் வீரர் ஒருவரை தக்க வைத்தால் 4 கோடி சம்பளம் அளிக்க வேண்டும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ரானா போன்ற வீரர்களை தக்க வைக்க வாய்ப்பு உள்ளது.

இவர்களுடன் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரையும் தக்க வைக்க வேண்டும் என்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்துக்கு முன்பே 75 கோடியை இவர்களுக்கு சம்பளமாக அளிக்க வேண்டியது இருக்கும். அதன் பின் ஏலத்தில் செலவிட 45 கோடி ரூபாய் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசம் இருக்கும். அதை வைத்துக் கொண்டு குறைந்தபட்சம் 14 வீரர்களையாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்க வேண்டியது இருக்கும்.
அது சிக்கலாக அமையும். அதனால், ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் பங்கேற்க வைத்து ரைட் டூ மேட்ச் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவரை ஏலத்தில் குறைந்த சம்பளத்துக்கு வாங்க முயற்சிக்கும் என ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அப்படி நடந்தால் ஸ்ரேயாஸ் ஐயர் மனம் உடைந்து விடுவார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக் கானுக்கு உணர்ச்சிகளைப் பற்றி நிச்சயமாக புரியும் எனவும் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "ஒவ்வொரு அணியிலும் முதலில் கேப்டனை தான் தக்க வைக்க முயற்சி செய்வார்கள். அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி தக்க வைத்தால் 18 கோடி செலவிட வேண்டியது இருக்கும். அதற்காக கேப்டனை தக்க வைக்காமல் இருக்கவும் முடியாது. அவர் உங்களுக்கு கோப்பை வென்று தந்த கேப்டன்." என்றார்.
மேலும், "கவுதம் கம்பீர் இல்லாத நிலையில் அந்த அணி கேப்டனை தக்க வைப்பதன் மூலம் கடந்த ஆண்டு கோப்பை வென்றதன் தொடர்ச்சியாக ஒரு அணியை கட்டமைக்க முடியும். ஸ்ரேயாஸ் ஐயரை ரைட் டூ மேட்ச் அதிகாரத்தை பயன்படுத்தி 18 கோடிக்கு குறைவான சம்பளத்தில் வாங்கலாம். ஆனால், அது போன்ற ஒரு விஷயத்தை ஒரு அணியின் கேப்டனுக்கு நாம் செய்ய முடியாது. ஏனெனில், இந்த விளையாட்டு மனிதர்களால் விளையாடப்படுவது. மனிதர்களுக்கு இதயம் மற்றும் உணர்ச்சி உள்ளது. அவரை அணியிலிருந்து விடுவித்தால் அதனால் அவர் மனம் உடைந்து விடுவார்." என்றார் ஆகாஷ் சோப்ரா.
மேலும், "ஷாரூக் கானை விட உணர்ச்சிகளை வேறு யார் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்? ரிங்கு சிங்கை ஏலத்தில் விடுவித்தால் நிச்சயமாக அவருக்கு 14 கோடி ரூபாய் கிடைக்கும். அதனால், அவரை தக்க வைப்பதே சரியான முடிவாக இருக்கும். ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் தக்க வைக்கலாம். ஆனால், நான்காவது வீரராக தக்க வைக்கப்படுபவருக்கு 18 கோடி ரூபாய் அளிக்க வேண்டியது இருக்கும். இவர்கள் இருவரில் யாருக்கு 18 கோடி? யாருக்கு 11 கோடி? என்ற குழப்பம் ஏற்படும்." என்றார் ஆகாஷ் சோப்ரா.


Click it and Unblock the Notifications