9 கிரகங்களும் உச்சத்துல இருக்கு.. ஸ்ரேயாஸ் ஐயர்தான் ODI கேப்டன்.. பிரபல ஜோதிடர் லோபோ கணிப்பு
மும்பை: "2027-ம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு உச்சபட்ச சக்தியை வழங்கும். அந்த ஆண்டு அவர் இந்திய அணியின் கேப்டனாக பிரகாசிக்க வாய்ப்புள்ளது" என்று பிரபல அறிவியல் ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்திருப்பது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவராக இருந்தும், 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த ஜோதிடக் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கிரீன்ஸ்டோன் லோபோ, ஸ்ரேயாஸ் ஐயரின் ஜாதகம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். "ஸ்ரேயாஸ் ஐயருக்கு மிக அபாரமான ஜாதகம் உள்ளது. 1994-ல் பிறந்த அவரது ஜாதகத்தில், புளூட்டோ கிரகம் உச்சத்தில் இருக்கிறது, இது மிகவும் சக்தி வாய்ந்தது. நெப்டியூன் ஆழ்ந்த உச்சத்திலும், மேலும் மூன்று சிறுகோள்கள் மிகவும் வலுவான நிலையிலும் உள்ளன. அவரது ஜாதகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், இந்திய அணியை ஏதாவது ஒரு வடிவத்தில் வழிநடத்தும் திறன் அவருக்கு இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய பின்னடைவுகள் தற்காலிகமானதே என்று கூறும் லோபோ, "2026-ல் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் ஸ்ரேயாஸ் நிச்சயம் இடம்பெறுவார். குறிப்பாக, 2027-ம் ஆண்டில் அவரது கிரகங்கள் உச்சபட்ச சக்தியுடன் இருக்கும். அப்போது அவர் 50 ஓவர் உலகக் கோப்பை அணியில் முக்கியப் பங்கு வகிப்பார், ஒருவேளை கேப்டனாகக் கூட இருக்கலாம்" என்று ஆருடம் தெரிவித்துள்ளார்.
நடப்புச் சூழலும், தேர்வாளர்களின் பார்வையும்:
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணியின் வெற்றியில் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அந்தத் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் இவர்தான். 2025 ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 604 ரன்கள் குவித்து, அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
இருந்தபோதிலும், அஜித் அகார்கர் தலைமையிலான இந்திய அணி தேர்வுக்குழு, ஆசியக் கோப்பைக்கான அணியில் சுப்மன் கில், ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்து, ஸ்ரேயாஸ் ஐயரை புறக்கணித்தது. அவரை 15 வீரர்கள் அடங்கிய முதன்மை அணி மட்டுமின்றி, ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் சேர்க்கவில்லை.
தற்போதைய புறக்கணிப்பு, விமர்சனங்கள், மற்றும் எதிர்கால கேப்டன்சி குறித்த பேச்சுகளுக்கு மத்தியில், ஜோதிடரின் இந்தக் கணிப்பு ஸ்ரேயாஸ் ஐயரின் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. கிரகங்கள் கை கொடுக்குமா, ஸ்ரேயாஸ் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக உருவெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications