மும்பை: இந்திய அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 6 மாத காலத்திற்கு ஓய்வு எடுப்பதாக அறிவித்து இருந்தார். அதே சமயம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் கூறி இருக்கிறார். இது குறித்து முன்னாள் தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
"ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாட உடல் தகுதி இருக்கிறது, ஆனால் சிவப்புப்பந்து (டெஸ்ட்) கிரிக்கெட் விளையாட மட்டும் தகுதி இல்லையா?" என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான முதலாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்தியா 'ஏ' அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகச் செயல்பட்டார். இந்தப் போட்டிக்குப் பிறகு, அவர் பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது உடல்நிலை டெஸ்ட் கிரிக்கெட்டின் கடினமான சவால்களை எதிர்கொள்ள இன்னும் தயாராகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், அதிலிருந்து மீண்டு வந்தாலும், நீண்ட நேரம் களத்தில் நிற்கும்போது, முதுகுப் பகுதியில் வலி மற்றும் விறைப்புத்தன்மை ஏற்படுவதாக அந்த கடிதத்தில் கூறியுள்ளார். எனவே, தனது உடலின் வலிமையையும், தாங்குதிறனையும் அதிகரிப்பதற்காக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 6 மாத காலம் ஓய்வு எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தக் கோரிக்கையைப் பிசிசிஐயும் ஏற்றுக்கொண்டு, அவரை இந்தியா 'ஏ' கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. ஆனால், ஆச்சரியம் அளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு விராட் கோலி போன்ற ஜாம்பவான்களை அறிமுகப்படுத்திய முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கார் ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த முடிவு குறித்து கடுமையாக பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "உண்மையைச் சொல்லப்போனால், இது எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர், சிவப்புப்பந்து (டெஸ்ட்) கிரிக்கெட் விளையாட உடல் தகுதி இல்லை, ஆனால் வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) கிரிக்கெட் விளையாட தகுதி இருக்கிறது என்கிறார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கும், சிவப்புப்பந்து கிரிக்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குப் புரியவில்லை."
"என்னைப் பொறுத்தவரை, நீங்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாட தகுதியுடன் இருந்தால், நிச்சயமாகச் சிவப்புப்பந்து கிரிக்கெட் விளையாடவும் தகுதியுடன்தான் இருப்பீர்கள். இப்படிச் சிவப்புப்பந்து, வெள்ளைப்பந்து எனப் பிரித்துப் பார்ப்பதெல்லாம் என் புரிதலுக்கு அப்பாற்பட்டது" என்று வெங்சர்க்கார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உண்மையில், டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஐந்து நாட்கள், ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் என நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டியிருக்கும். இது வீரர்களின் உடல் மற்றும் மன வலிமையைச் தீவிரமாகச் சோதிக்கும். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிடும். ஒருவேளை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீண்ட நேரம் களத்தில் நிற்பதால் ஏற்படும் உடல்ரீதியான சோர்வைத் தவிர்ப்பதற்காகவே ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
இருப்பினும், ஒரு வீரர் ஒரு வடிவ கிரிக்கெட்டிற்கு மட்டும் 'உடற்தகுதி இல்லை' என்று கூறுவது, இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய போக்கை உருவாக்கியுள்ளது. இந்த முடிவு ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கையை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்குமா அல்லது அவரது டெஸ்ட் கிரிக்கெட் கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியும் உள்ளது.
அதே சமயம் திலீப் வெங்க்சர்க்கார் விமர்சனத்திலும் ஒரு நியாயம் உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரை போல அடுத்து பும்ரா அல்லது வேறு சில வீரர்களுக்கும் குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட் போட்டிகளில் ஆட உடற்தகுதி இல்லை என அறிவித்தால் என்ன நடக்கும்? என்பதையும் பிசிசிஐ ஆலோசிக்க வேண்டும். உடற்தகுதி குறித்த முடிவை பிசிசிஐ-யின் மருத்துவ குழு எடுப்பதே சரியாக இருக்கும்.