அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் அபாரமாக ரன் குவித்து வரும் நிலையில், அவர் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். டி20 போட்டிகளில் 5000 ரன்கள் குவித்து அவர் சாதனை படைத்திருக்கிறார். மேலும், அதிவேகமாக 5000 டி20 ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 200 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி அந்த இலக்கை எட்டியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். 19 ஓவர்களிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
இந்த ஆட்டத்தின் போது அவர் டி20 போட்டிகளில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்திருந்தார். விராட் கோலியின் முந்தைய சாதனையை அவர் முறியடித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கும் விராட் கோலி, 167 இன்னிங்ஸ்களில் 5000 டி20 ரன்கள் குவித்து இருந்தார். தற்போது சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5000 டி20 ரன்கள் சேர்த்திருக்கிறார்.
இந்திய அளவில் அதிவிரைவாக 5000 டி20 ரன்கள் குவித்த வீரராக இருப்பவர் கே.எல். ராகுல். அவர் 143 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல் சாதனையை எட்டி இருக்கிறார்.