ஒரே கல்லில் 3 மாங்காய்.. சச்சினின் சாதனையை உடைத்தெறிந்த சுப்மன் கில்.. ரசிகர்கள் ஆச்சரியம்!
ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், ஃபகர் ஜமான் உள்ளிட்ட பல வீரர்களின் பிரமாண்ட சாதனைகளை இந்திய வீரர் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து விட்டது. எனினும் மைக்கேல் பிரேஸ்வெல்லின் அட்டகாச சதத்தால் (140) கடைசி ஓவர் வரை வந்து 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரட்டை சதம்
இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் சுப்மன் கில் தான். இந்திய அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் ஒருபுறம் சரிந்து வந்த போதும் சுப்மன் கில் தூண் போல நிலைத்து நின்றார். 149 பந்துகளை சந்தித்த அவர் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்களை விளாசி அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவர் வரை அவர் நின்று முடித்துக்கொடுத்தார்.

பல்வேறு சாதனை
இந்நிலையில் இதன் மூலம் பல்வேறு சாதனைகள் தகர்க்கப்பட்டுள்ளன. அதாவது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மா கடந்த 2013ம் ஆண்டு தனது 26 வயதில் இரட்டை சதம் அடித்தார். அதன்பின் கடந்த டிசம்பர் (2022) மாதம் இஷான் கிஷான் 24 வயதில் அடித்தார். ஆனால் சுப்மன் கில் தற்போது 23 வயதில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

பின்னுக்கு சென்ற சச்சின்
சச்சின் சாதனையும் உடைக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஸ்கோர் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தான் இருந்தார். அவர் இதே ஐதராபாத் மைதானத்தில் 186 ரன்களை அடித்திருந்தார். ஆனால் இன்று இதே மைதானத்தில் சுப்மன் கில் 208 ரன்களை அடித்து சச்சினை முந்தியுள்ளார்.

1000 ரன்கள்
இதே போல சர்வதேச அளவில் அதிவேகமாக 1000 ரன்களை அடித்தவர்கள் பட்டியலிலும் அடித்து நொறுக்கிக்கொண்டு முன்னேற்றம் கண்டுள்ளார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் 18 இன்னிங்க்ஸ்களில் அடித்திருந்தார். ஆனால் சுப்மன் கில் தற்போது 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்து 2வது இடத்தை பிடித்தார்.


Click it and Unblock the Notifications