சுப்மன் கில் செய்த தவறு என்ன? இஷான் கிஷன் இரட்டை சதத்தால் குழப்பம்.. வாசிம் ஜாபர் சொன்ன கருத்து!
மும்பை: இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்ததன் மூலம் மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் ஓரங்கட்டப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தாலும், கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்திய ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இளம் வீரரான இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனால் இந்திய ஒருநாள் அணியில்முக்கிய அங்கமாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு?
இதனிடையே ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறி இருந்தால், இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு தான் இந்திய அணி வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்திற்காக விக்கெட் கீப்பரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் நடப்பாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பின், இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி சிறந்த சராசரியை கில் மட்டுமே வைத்துள்ளார். இருந்தும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் நிலை என்ன?
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில், சுப்மன் கில்லின் நிலையை நினைத்தால் கவலையளிக்கிறது. ஒரே போட்டியில் இரட்டை சதம் அடித்ததால், அவர் மாற்று தொடக்க வீரராக மாறி இருக்கிறார். தவான் மற்றும் ரோகித் சர்மாவுக்கு அடுத்த தொடக்க வீரராக கில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தார். ஆனால் இஷான் கிஷனின் ஆட்டம் அனைத்தையும் மாற்றியுள்ளது.

இந்திய அணியில் குழப்பம்
இந்த ஒருநாள் தொடரில் கில் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. அவரது ஆட்டத்தில் எந்த தவறும் இல்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ரன்கள் சேர்த்தார். ஆனால் இஷான் கிஷன் ஆட்டத்தால் இந்திய அணியில் குழப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஷிகர் தவான், ரோகித் சர்மாவுக்கு பின் அடுத்த தொடக்க வீரர் யார் என்பதில் அதிக குழப்பம் வரும்.

ஷிகர் தவான் ஃபார்ம்
ஷிகர் தவான் இப்போது சரியான ஃபார்மில் இல்லை. ஆனால் அவரின் முந்தைய கால சாதனைகளால் அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பார். ஆனால் அடுத்தக்கட்ட தொடக்க வீரர் யார் என்பதில் தெளிவில்லாமல் இருக்கும். கடந்த காலங்களில் இளம் வீரர்கள் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்பது புரியாது. அதேபோன்ற நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications