இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன் பதற வைத்த சுப்மன் கில்.. பயிற்சியின்போது 2 முறை நடந்த சம்பவம்
கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னதாக 3 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நடந்த வலைப் பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இருமுறை காயம் ஏற்பட்டது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக கொழும்பு சென்றுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று அங்குள்ள வானிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள லேசான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள், வியாழக்கிழமை முழு மூச்சில் பயிற்சியில் இறங்கினர். தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் மேற்பார்வையில் நடைபெற்ற பயிற்சியின் போது, வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் வீசிய பந்தை எதிர்கொண்ட கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை கட்டை விரலில் பந்து பலமாகத் தாக்கியது. இதனால் வலியால் துடித்த அவருக்கு உடனடியாக பிசியோதெரபிஸ்ட் மூலம் கட்டுப் போடப்பட்டது.

வலி இருந்தபோதிலும் கட்டை விரலில் கட்டுடன் தொடர்ந்து பேட்டிங் செய்த கில், பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களின் வலைப்பயிற்சிக்குச் சென்று தனது பயிற்சியை நிறைவு செய்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே ஸ்லிப் திசையில் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மீண்டும் ஒருமுறை அவரது கையில் பந்து தாக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த இரு காயங்களும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால், அவர் எவ்வித அசெளகரியமும் இன்றி தனது முழுப் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்தார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15 அன்று கல்லே மைதானத்திலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்பிலும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 0-2 என இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி ஆடும் டெஸ்ட் தொடர் என்பதால் இலங்கை டெஸ்ட் தொடரின் இரு போட்டிகளிலும் வெற்றி பெற இந்திய அணி முனைப்புடன் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் அதிக டெஸ்ட் அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றிருந்தது. ஆனால், அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. தற்போது 48.15 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை விட பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
