லண்டன்: கிரிக்கெட் உலகில் கடந்த 10 ஆண்டுகளாக விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை 'ஃபேப் 4' (Fab Four) என்று அழைக்கப்படுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது அபாரமான பேட்டிங்கால் ஆதிக்கம் செலுத்திய இந்த ஜாம்பவான்களின் காலம் மெல்ல முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த தலைமுறையின் 'ஃபேப் 4' யார் என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்களான மொயின் அலியும், அடில் ரஷீத்தும் அடுத்த தலைமுறை ஃபேப் 4 வீரர்கள் யார் என தங்கள் தேர்வை கூறி உள்ளனர்.
மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் இருவரும் மூன்று வீரர்களின் பெயர்களை ஒருமித்த குரலில் குறிப்பிடுகின்றனர்: சுப்மன் கில் (இந்தியா), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), ஹாரி புரூக் (இங்கிலாந்து).
நான்காவது இடத்திற்கு மட்டும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அடில் ரஷீத், இங்கிலாந்தின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல்-ஐ தேர்வு செய்ய, மொயின் அலியோ நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா-வை தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தனது கிளாசிக்கான பேட்டிங் டெக்னிக் மற்றும் அனைத்து விதமான போட்டிகளிலும் ஜொலிக்கும் திறமையால் ஏற்கனவே தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்தியுள்ளார். மறுபுறம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புயலைப் போல நுழைந்து, தனது அசாத்தியமான மற்றும் அச்சமற்ற அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஒருவர் நிதானம், மற்றொருவர் அதிரடி என இந்த இரட்டையர்கள், இந்திய பேட்டிங்கின் அடுத்த 10 ஆண்டுகளை வரையறுக்கப் போகும் சக்திகளாகப் பார்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு இங்கிலாந்தின் பதிலாக ஹாரி புரூக் இருக்கிறார். இங்கிலாந்தின் வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹாரி புரூக், தனது 360 டிகிரி அதிரடி ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களைத் திணறடிக்கும் வல்லமை படைத்தவர். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது ஆக்ரோஷமான பாணியைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மொயின் அலி, ரச்சின் ரவீந்திராவைத் தேர்ந்தெடுத்தது மிகவும் ஆழமான ஒரு கணிப்பாக பார்க்கப்படுகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தனது பேட்டிங்கால் மிரட்டிய ரவீந்திரா, ஒரு சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரும் கூட. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய ஒரு முழுமையான வீரராக அவர் வளர்ந்து வருகிறார். குறிப்பாக, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில் அவரது பங்கு முக்கியமானது.
அடில் ரஷீத்தின் தேர்வு, ஜேக்கப் பெத்தெல், திறமையின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு முதலீடு. இன்னும் சர்வதேச அரங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், அவரது இயல்பான திறமையும், அதிரடியான ஆட்டமும் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதைக் காட்டுகிறது.
மொத்தத்தில், விராட் கோலி, ஜோ ரூட் போன்ற ஜாம்பவான்கள் உருவாக்கிய வெற்றிடத்தை நிரப்ப, ஒரு புதிய தலைமுறை தயாராகிவிட்டது. சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹாரி புரூக் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள், தங்களது அபாரமான திறமையால் கிரிக்கெட்டின் அடுத்த 10 ஆண்டுகளை நிச்சயம் ஆளப்போகிறார்கள்.