ஜெய்ப்பூர்: 2025-26 விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனுமான சுப்மன் கில் விளையாடவில்லை. போட்டி தொடங்குவதற்குச் சற்று முன்பு அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அணியிலிருந்து விலகியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுப்மன் கில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சிக்கிம் போட்டிக்கு முன்பாக சுப்மன் கில்லுக்கு, திடீரென 'உணவு ஒவ்வாமை' ஏற்பட்டது. இதன் காரணமாகக் கடைசி நேரத்தில் அவர் ஆடும் லெவனில் (Playing XI) இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், அவருடன் அணியில் இணைந்த மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டியில் பங்கேற்றார்.

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆசியக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கத் தொடர்களில் அவரது பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மறுபுறம் சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்பில் ஜொலித்ததால், கில்லுக்குப் பதில் சாம்சன் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார்.
இந்தத் நீக்கத்திற்குப் பிறகு, சுப்மன் கில் விளையாடும் முதல் போட்டியாக பஞ்சாப் - சிக்கிம் போட்டி அமைந்திருக்கும். தனது ஃபார்மை நிரூபிக்க அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்பட்டது. ஆனால், உடல்நலக்குறைவு அந்த வாய்ப்பைத் தட்டிப்பறித்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூரியா வித்யாலயா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இங்கு பார்வையாளர்களுக்குப் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் போட்டி தொலைக்காட்சியிலோ அல்லது இணையத்திலோ நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு இன்று கூடுகிறது. கில் இன்று களத்தில் இறங்காவிட்டாலும், ஒருநாள் அணி கேப்டன் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அணியைத் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கழுத்து வலி, கால் விரல் காயம் எனத் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கில், தற்போது உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.