Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கோலியை சுதந்திரமா ஆட விட்டுட்டா போதும் போட்டியை.." வெற்றிக்கு பின் கேப்டன் சுப்மன் கில் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி போன்ற ஒரு மாபெரும் வீரருக்கு கேப்டனாக எந்த அழுத்தமும் தராமல், அவரை சுதந்திரமாக விளையாட விடுவதே அணிக்கு வெற்றியை தேடித்தரும் என்று கூறினார். மேலும், 350 ரன்களை நோக்கிச் சென்ற போட்டியை குல்தீப் யாதவ் எப்படி மாற்றினார் என்பது குறித்தும், இந்திய அணியில் 8வது இடத்தில் ஒரு பேட்டர் தேவைப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Shubman Gill Praises Virat Kohli s Freedom and Kuldeep Yadav s Turnaround After 1st ODI Win

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி 108 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 110 ரன்கள் விளாசினார். விராட் கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

போட்டிக்கு பின் கேப்டன் சுப்மன் கில், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் ஆட்டமிழந்த போது நானே போட்டியை முடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடித்தந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இருப்பினும் இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் நான் அடித்த அந்த முன்வரிசை டிரைவ் ஷாட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது."

"குல்தீப் யாதவ் போன்ற ஒரு பந்துவீச்சாளர் நடுப்பகுதி ஓவர்களில் அற்புதமாக பந்துவீசினால், அவர் நமக்கு எப்போதுமே விக்கெட் பெற்றுத் தரும் துருப்புச்சீட்டாக இருப்பார். அதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்து நாம் சற்று பின்வாங்கினோம். ஒரு கட்டத்தில் அவர்கள் 340 முதல் 350 ரன்கள் வரை எளிதாக எடுப்பார்கள் போல தெரிந்தது. ஆனால் குல்தீப் சரியான நேரத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை நம் பக்கம் திருப்பினார். அவர்களை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது ஒட்டுமொத்த அணியின் மிகப்பெரிய கூட்டு முயற்சி."

"கோலி பந்துகளை எதிர்கொள்ளும் விதம் அற்புதமாக இருக்கிறது. அவர் தனது ஆட்டத்தை மிகவும் ரசித்து, முழு சுதந்திரத்துடன் விளையாடி வருகிறார். அவரது பேட்டிங்கில் தெரிகிற மாற்றமே அதற்கு சான்று. பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடும் திறமை அவரிடம் எப்போதுமே உண்டு. அதை இப்போது மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி வருகிறார்.

தேசத்திற்காக எத்தனையோ போட்டிகளை தனி ஆளாக வென்று கொடுத்த ஒரு ஜாம்பவானுக்கு நாம் எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. அவரை அவர் விருப்பப்படி சுதந்திரமாக ஆட விட்டுவிட வேண்டும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நமக்காக போட்டிகளை எளிதாக ஜெயித்துக் கொடுத்துவிடுவார்."

"60 - 80 ரன்கள் குறைவா அடிச்சிட்டோம்.. தோல்விக்கு காரணமே..".. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் வருத்தம்

"அடுத்த 12 மாதங்களுக்கு இந்திய அணிக்கு 8வது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு வீரர் இருப்பது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 25 முதல் 30 ரன்கள் அடிக்கக்கூடிய ஒரு வீரர் அந்த இடத்தில் தேவை. கடந்த காலங்களில் நாம் 250 ரன்களுக்கு 5 விக்கெட் என நல்ல நிலையில் இருந்தும், அதன்பின் கீழ்வரிசையில் போதிய பேட்டிங் பலம் இல்லாததால் நினைத்த ரன்களை எடுக்க முடியாமல் போயிருக்கிறது. எனவே 8வது பேட்டர் இடம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அணிக்கு எது சரியாக வரும் என்பதை பல மாற்றங்கள் செய்து தொடர்ந்து சோதிப்போம்." என்றார் சுப்மன் கில்.

Story first published: Monday, September 28, 2026, 8:26 [IST]
Other articles published on Sep 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+