"ஒருநாள் போட்டி இனிமே 40 ஓவரா? அதற்கு பதிலா..”.. ODI கிரிக்கெட்டை மீட்க சுப்மன் கில் யோசனை
பர்மிங்காம்: ஒருநாள் போட்டிகளின் ஓவர்களை 40 ஆகக் குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு இருப்பதாக சில நாட்கள் முன்பு செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் அவ்வாறு ஓவர்களை குறைக்கக் கூடாது எனக் கூறி இருக்கிறார். மேலும், ஒருநாள் போட்டிகளை சுவாரசியமாக்க மூன்று அணிகள் மற்றும் நான்கு அணிகள் பங்கேற்கும் தொடர்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அதிரடி யோசனை ஒன்றை கூறி இருக்கிறார்.
சர்வதேச டி20 மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்களின் அசுர வளர்ச்சியால், 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. இதனால், ஒருநாள் போட்டிகளின் ஓவர்களை 40 ஆகக் குறைக்க ஐசிசி திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் சுப்மன் கில் இது குறித்துப் பேசுகையில்: "ஒருநாள் போட்டிகளை 40 ஓவர்களாகக் குறைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, மூன்று அணிகள் அல்லது நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர்களை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
முன்பெல்லாம் ஆஸ்திரேலியாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து விளையாடிய ட்ரை-சீரிஸ் தொடர்களைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இருதரப்பு தொடர்களை விட, வெவ்வேறு மைதானங்களில் வெவ்வேறு அணிகளுடன் விளையாடும் போது ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக மாறும். இது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நல்ல சுவாரஸ்யத்தை அளிக்கும்" என்றார்.
மேலும், ஒருநாள் உலகக் கோப்பையின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய சுப்மன் கில், "நான் 50 ஓவர் போட்டிகளைப் பார்த்துதான் வளர்ந்தேன். உலகக் கோப்பை என்றாலே என் நினைவுக்கு முதலில் வருவது 50 ஓவர் உலகக் கோப்பை தான். எனது வாழ்நாளில் நான் வெல்ல விரும்பும் மிக உயரிய கோப்பை என்றால் அது 50 ஓவர் உலகக் கோப்பை தான்" என்றும் கூறினார்.
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஜூலை 14 முதல் 19 வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications

