மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இம்முறை பெரிதும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் தொடக்கத்தில் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
எனினும் தனக்கு ஏற்பட்ட உடல் அளவிலான பின்னடைவிலிருந்து மீண்டு வந்த கில், தற்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கூட கில் எட்டு ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் டெங்குவுக்கு பிறகு தான் 6 கிலோ வரை எடையை இழந்ததாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் உலக கோப்பை தொடருக்கு மிகவும் எதிர்பார்ப்புடன் தயாராகி இருந்தேன். ஆனால் டெங்கு பாதிப்பால் முதலில் ஆறு கிலோ இழந்தேன். பிறகு தற்போது இரண்டு கிலோ அதிகரித்து இருக்கிறது.
எனினும் என்னுடைய உடல் வலு இழந்து விட்டது. இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசி எங்களை எல்லாம் ஆச்சரியப்படுத்தி விட்டார்கள். எங்களின் பணியை அவர்கள் எளிதாக்கி விட்டார்கள். நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது பதற்றம் அடைவது கிடையாது. என்னுடைய பேட்டிங் தொடங்கும் போது எவ்வாறு மனதளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும்.
டெங்குவால் நான் இன்னும் முழு உடல் தகுதியை அடையவில்லை என்றாலும் நான் எவ்வாறு விளையாடப் போகிறேன் என்பது குறித்து முன்கூட்டியே நாங்கள் ஆலோசித்து வைத்து விட்டோம். இன்றைய போட்டியில் சில பந்துகள் நன்றாக ஸீம் ஆனது. இதன் மூலம் கொஞ்சம் நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். இதனை தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் மீது நெருக்கடியை செலுத்த விரும்பினோம்.
கடந்த சில போட்டிகளில் நான் நன்றாக ஆட்டத்தை தொடங்கினாலும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை. சில சமயம் நாம் நல்ல ஷாட்டுகளை விளையாடுவோம். ஆனால் அது நேராக பில்டரிடம் போய் சென்று விடும். இன்றைய ஆட்டத்தில் சிங்கிள்ஸ் அதிகம் எடுக்க வேண்டும் என நினைத்தோம். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒன்றும் 400 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம் கிடையாது.
நாங்கள் 350 ரன்கள் தொட்டதே சிறப்பாக விளையாடியதே காட்டுகிறது. இதற்கு ஸ்ரேயாஸ் பங்கு மிகவும் முக்கியமாகும். முகமது சமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அவருடைய தலையை தடவி காட்டி கொண்டாடியதற்கு காரணம் எங்களுடைய பந்துவீச்சு பயிற்சியாளர்களுக்கு முடி இல்லை என்பதை கிண்டல் செய்ய தான் என்று கூறினார்.