இந்தியா -நியூசிலாந்து ஏ அணிகள் மோதல் -இரட்டை சதம் அடித்த இளம் வீரர்
கிறிஸ்ட்சர்ச் : இந்தியா மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் இளம் வீரர் சுப்மன் கில் இரட்டை சதத்தை அடித்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
கடந்த ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்த சுப்மன் கில் தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இரண்டாவது இரட்டை சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார். இதன்மூலம் நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் இவர் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய இந்த டெஸ்ட் போட்டியை இரு அணிகளும் டிரா செய்துள்ளன. இந்திய வீரர்கள் பிரயங்க் பாஞ்சால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரும் இந்த போட்டியில் சதமடித்துள்ளனர்.

4 நாள் டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச போட்டிகள் ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில், இரு நாடுகளின் ஏ அணிகளுக்கிடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் களமிறங்கிய 20 வயதான சுப்மன் கில் தனது இரண்டாவது சதத்தை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பார்வையாளர்களை கவர்ந்த சுப்மன்
இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் இளம்வீரர் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ளார். முதல் இன்னிங்சில் 83 ரன்களை அடித்த இவர் இரண்டாவது இன்னிங்சில் 279 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் 204 ரன்களை அடித்துள்ளார். ஹனுமா விஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 216 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்களும் அடித்தது.

முதல் இன்னிங்சில் 562 ரன்கள்
முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 562 ரன்களை குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்திய அணியின் சுப்மன் கில் இரட்டை சதமும் பிரியங் பாஞ்சால் மற்றும் ஹனுமா விஹாரி சதமும் அடித்து சிறப்பான ரன்குவிப்பிற்கு உதவினர்.

டெஸ்ட் போட்டியில் கிட்டுமா வாய்ப்பு?
இந்தியா ஏ அணியின் இந்த 4 நாள் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ள சுப்மன் கில் இந்தியா -நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அணியில் அவரது இடம் மீண்டும் தக்கவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டக் -அவுட்டில் வெளியேற்றம்
வரும் 21ம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ள மயங்க் அகர்வால், இந்த ஏ அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளின் இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார். வரும் 21ம் தேதி வெல்லிங்டனில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications