மும்பை : ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் அனைவரும் இந்த விஷயத்தை சாதிக்க வேண்டும். இந்த குறிக்கோளை அடைய வேண்டும் என பல முடிவுகளை எடுத்திருப்போம். ஆனால் பலருக்கும் அது கை கூடாமல் போயிருக்கும்.
சிலர் தாங்கள் நினைத்த லட்சியத்தை எட்டி பிடித்திருப்பார்கள். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக இருந்த கில் தன்னுடைய 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு குறிக்கோளை வெளியிட்டு அதில் எந்த அளவுக்கு அடைந்திருக்கிறேன் என்பதை காட்டியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கில், ஒரு ஆண்டுக்கு முன்பு இதே நாள் எனக்கு என்ன வேண்டும் என்பதை இந்த பிரபஞ்சத்துக்கு வெளிப்படுத்தி இருந்தேன். 2023 ஆம் ஆண்டு தற்போது முடியும் நிலையில் இந்த ஆண்டு நல்ல ஒரு அனுபவமாகவும், மகிழ்ச்சி தரக்கூடிய பல விஷயங்களையும் பல பாடங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனினும் நான் நினைத்தது போல் இந்த ஆண்டு என்னால் முடிக்க முடியவில்லை. ஆனால் நான் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எந்த குறிக்கோளை வைத்தேனோ, அதன் அருகில் வரை சென்று விட்டேன் என்பதை பெருமையாக கூறுகிறேன். என்னால் முடிந்த அளவு உழைத்திருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு பல சவால்களையும் பல வாய்ப்புகளையும் நமக்கு வழங்கும்.நம்பிக்கையுடன் இந்த ஆண்டு எதிர்கொண்டு நமது குறிக்கோளை நோக்கி போவோம்.
ரசிகர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு அன்பையும் மகிழ்ச்சியும் பலத்தையும் நீங்கள் செய்யும் அனைத்திலும் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தனது புத்தாண்டு குறிக்கோளாக இந்தியாவுக்காக அதிக சதம் அடிக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் சிறந்த உழைப்பை வெளிகாட்ட வேண்டும்.
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும், ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற வேண்டும் என்று பேப்பரில் எழுதி இருந்திருக்கிறார். இதில் அவர் இந்தியாவுக்காக அதிக சதம், இந்திய அணிக்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள், ஐ பி எல் ஆரஞ்சு கோப்பை என அனைத்தையும் அடைந்து விட்டார். எனினும் உலகக்கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஆகியவற்றில் நினைத்தது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.