“என் நிம்மதியே போச்சு; தூங்கவே விடல” இரட்டை சதத்திற்கு முன் இஷான் செய்த சேட்டை.. கில் சுவாரஸ்ய தகவல்
ஐதராபாத்: நியூசிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இஷான் கிஷான் தன்னை டார்ச்சர் செய்துவிட்டதாக சுப்மன் கில் சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

சுப்மன் கில் இரட்டை சதம்
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சுப்மன் கில் இருந்தார். விக்கெட்கள் சீரான இடைவெளியில் ஒருபுறம் சரிந்து வந்த போதும் சுப்மன் கில் தூண் போல நிலைத்து நின்றார். 149 பந்துகளை சந்தித்த அவர் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்களை விளாசி அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவர் வரை அவர் நின்று முடித்துக்கொடுத்தார்.

சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் தற்போதைய இந்திய அணியில் இரட்டை சதம் அடித்துள்ள ரோகித் சர்மா, இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய 3 பேரிடமும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் முதல் போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில் என்னவெல்லாம் செய்தார் என்றும், எப்படி இரட்டை சதம் அடிக்க முடிந்தது என்றும் இஷான் கிஷான் கேள்வி எழுப்பினார்.

நாசம் செய்தார்
இதற்கு பதிலளித்த சுப்மன் கில், போட்டிக்கு முன் எனது அனைத்து செயல்பாட்டையும் இஷான் கிஷான் நாசம் செய்துவிட்டார். என்னை தூங்கக்கூட விடவில்லை. இஷானும் நானும் ஒரே அறையில் தான் தங்கியுள்ளோம். ஹெட்போனை கூட பயன்படுத்தாமல் செல்போனில் அதிக சத்தத்துடன் படம் பார்ப்பார். இதனால் நான் ஆத்திரத்தில் திட்டுவதும் உண்டு. ஆனால் அவரின் அறை என்பதால் அவருக்கு ஏற்றார் போல தான் இருக்க வேண்டும் எனக்கூறுவார். இதனால் சண்டை ஏற்படும் என சுப்மன் கில் கூறினார்.

இஷான் கிஷான் குசும்பு
இதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த இஷான் கிஷான், நீ எனது அறையில் தூங்கியதால் தான் என்னை போன்றே இரட்டை சதத்தை அடிக்க முடிந்தது. எனது அறையின் சக்தி அப்படி என்பது போல கூற, அனைவரும் சிரித்தனர். உண்மையில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் நெருங்கிய நண்பர்கள் ஆகும். இவர்கள் இவரும் நீண்ட நாட்களாக ஒன்றாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications