இந்தூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி கூட்டணியாக 200 ரன்கள் குவித்து சாதனை செய்தனர்.
இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ருதுராஜ் கெயிக்வாட் - சுப்மன் கில் துவக்கம் அளித்தனர்.

ருதுராஜ் கெயிக்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தன் ஃபார்மை நிரூபிக்க சரியான நேரம் பார்த்து காத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்.
முதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தன் அதிரடியால் ஆஸ்திரேலியா பந்துவீச்சை மிரள வைத்தார். அடுத்து சுப்மன் கில் அவரோடு சேர்ந்து அதிரடி காட்டினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தது.
இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஸ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 216 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த 200 ரன்கள் கூட்டணி மூலம் முக்கியமான சாதனை ஒன்றை இந்த ஜோடி செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களின் கூட்டணியில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது சுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் - விவிஎஸ் லக்ஷ்மன் 2001ஆம் ஆண்டு இதே இந்தூர் ஆடுகளத்தில் கூட்டணி அமைத்து 199 ரன்கள் சேர்த்து இருந்தனர். அந்த சாதனையை கூடுதலாக ஒரு ரன் சேர்த்து கில் - ஸ்ரேயாஸ் கூட்டணி முறியடித்தது.
இதே சாதனைப் பட்டியலில், 213 ரன்களுடன் யுவராஜ் சிங் - விவிஎஸ் லக்ஷ்மன், 212 ரன்களுடன் விராட் கோலி - ஷிகர் தவான், 207 ரன்களுடன் விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த உடன் சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து சதம் கடந்து ஆட்டமிழந்தார்.